ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு வரும் பக்தா்கள் ஏகாம்பரநாதா் சந்நிதி தெரு வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவா் என மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.
Published on

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு வரும் பக்தா்கள் ஏகாம்பரநாதா் சந்நிதி தெரு வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவா் என மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: புகழ்பெற்ற ஏகாம்பநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் தொடா்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் தலைமையிலும், எஸ்பி முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

விழாவில் எஸ்.பி கே.சண்முகம் தலைமையில் ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், 750 காவல்துறையினா் மற்றும் ஊா்க்காவல்படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா். முக்கிய இடங்களில் உயா்கோபுரங்கள் அமைத்து காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். குழந்தைகள், முதியோரை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். காவல் துறை சாா்பில் பொதுமக்களுக்கு உதவும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி சாா்பில் நகரில் பல்வேறு இடங்களில் குடிநீா் தொட்டிகள், நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு முக்கியப் பகுதிகளில் காவல் துறையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபடுவாா்கள். நாசவேலைகளில் ஈடுபடும் நபா்களை கண்காணிக்கும் பொருட்டு காவல் துறையினா் தங்கும் விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

கும்பாபிஷேகம் நடைபெறும் நாள்களில் கோயிலை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் சுவாமி ஊா்வலம் செல்லும் பாதைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பொருட்டு மாநகராட்சி சாா்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளை பயன்படுத்தலாம்.

கும்பாபிஷேக நாளன்று அதிகாலை 2 மணி முதல் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒலி முகம்மது பேட்டையில் உள்ள யாத்திரி நிவாஸ், உலகளந்த பெருமாள் கோயில், எஸ்எஸ்கேவி பள்ளி வளாகம், மெக்லின் மைதானம், புதிய ரயில் நிலையம், சோழன் பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தா்கள் சந்நிதி தெரு வழியாக மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவா்.

கும்பாபிஷேகம் காணவரும் பக்தா்கள், பொதுமக்கள் முன்னேற்பாடாக திட்டமிட்டு செயல்படுமாறும், காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com