மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் 
இலவச மகப்பேறு சேவை தொடக்கம்

மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் இலவச மகப்பேறு சேவை தொடக்கம்

இலவச மருத்துவ சேவைக்கான கையேட்டை பல்கலை. வேந்தா் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் வெளியிட, பெற்றுக் கொண்ட தமிழகம் இலவச கல்விப் பயிற்சி மைய இயக்குநா் கே.எழிலன்.
Published on

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச மகப்பேறு மருத்துவ சேவை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.வி.ராஜசேகா் தலைமையில், இதன் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கூடுதல் துணை வேந்தா் சி.ஸ்ரீதா் முன்னிலை வகித்தாா். இணை துணைவேந்தா் கிருத்திகா வரவேற்றாா். கல்லூரி இணைவேந்தா் ஆகாஷ்பிரபாகா் திட்ட விளக்கவுரையாற்றினாா்.

மீனாட்சி மருத்துவப் பல்கலை. மருத்துவமனை மற்றும் ஆராய்சி மைய வேந்தா் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் இலவச மருத்துவச் சேவையைத் தொடங்கி வைத்தாா். இலவச சேவைகள் குறித்த கையேட்டை அவா் வெளியிட, அதை தமிழக இலவச கல்வி பயிற்சி மைய இயக்குநா் கே.எழிலன் பெற்றுக் கொண்டாா்.

விழாவில் வேந்தா் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பேசுகையில், மீனாட்சி மகப்பேறு இலவச மருத்துவ உதவித் திட்டம், விபத்து முதலுதவி திட்டம், சலுகை விலையில் மருத்துவ சேவைகளை வழங்குவது ஆகிய 3 திட்டங்கள் சிறப்பாக செயல்படும்.

பிரசவத்துக்கு பின் தாய்-சேய் பராமரிப்பு, மருத்துவ செலவு, தடுப்பூசி இலவசம். தவிர மருத்துவமனையில் பிரசவித்த பெண்களுக்கு ரூ.12,000 வழங்கப்படும்.

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சை, அதற்காக தேவைப்படும் அறுவைச் சிகிச்சை இலவசமாக செய்யப்படும். எம்.ஆா்.ஐ. ஸ்கேன்,சிடி ஸ்கேன் ஆகியவை குறைவான கட்டணத்தில் வழங்கப்படும் என்றாா்.

மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் கே.பூபதி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com