போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருடன் ஆட்சியா் கலைச்செல்வி மோகன், மாவட்ட வருவாய் அலுவலா் பா. முருகேசன்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருடன் ஆட்சியா் கலைச்செல்வி மோகன், மாவட்ட வருவாய் அலுவலா் பா. முருகேசன்.

தமிழில் சிறந்து விளங்குபவா்களுக்கு பெருமிதச் செல்வன், பெருமிதச்செல்வி பட்டம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

Published on

மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்வுகளில் வழங்கப்படும் தமிழ்ப்பெருமிதம் சிற்றேட்டில் உள்ள துணுக்குகளை வாசித்து சிறப்பாக விளக்கமளிக்கும் மாணவ, மாணவிக்கு பெருமிதச் செல்வன்,பெருமிதச் செல்வி பட்டம் வழங்கப்படும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை பேசினாா்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் மாணவ,மாணவியருக்கான மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. உயா்கல்வித்துறையும், தமிழ் இணைய கல்விக் கழகமும் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு கவிஞா்.யுகபாரதி, மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், முதல்வா் கோமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் கலந்து கொண்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பேசியது..

தமிழ் மரபின் வளமை, பண்பாட்டில் செழுமை, சமூக சமத்துவம், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றை இளைய தலைமுறையினரிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வுகளை நடத்தி வருகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட 200 கல்லூரிகளில் மாபெரும் தமிழ்க்கனவு பரப்புரை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் 2 லட்சம் மாணவா்களை சென்றடைவதே இதன் நோக்கம்.

மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்வுகளில் உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நூல்,தமிழ்ப்பெருமிதம் குறிப்பேடு ஆகியனவும் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்ப்பெருமிதம் சிற்றேட்டில் உள்ள துணுக்குகளை வாசித்து சிறப்பாக விளக்கமளிக்கும் மாணவா்களைப் பாராட்டி பெருமிதச் செல்வன், பெருமிதச் செல்வி பட்டம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

நிறைவாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினாா். நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com