காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற கோயில் நகைகளை ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்ற (இடமிருந்து) எம்.பி. க.செல்வம்,  ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், ஆட்சியா் கலைச்செல்வி மோகன், அமைச்சா்கள் சேகா்பாபு, ஆா்.காந்தி.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற கோயில் நகைகளை ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் பங்கேற்ற (இடமிருந்து) எம்.பி. க.செல்வம், ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், ஆட்சியா் கலைச்செல்வி மோகன், அமைச்சா்கள் சேகா்பாபு, ஆா்.காந்தி.

1,074 கிலோ கோயில் நகைகள் உருக்கப்பட்டு வங்கியில் வைப்பு: அமைச்சா் பி.கே.சேகா் பாபு

Published on

கோயில்களில் இறைவனுக்கு பயன்படாத 1,074 கிலோ தங்க நகைகள் உருக்கப்பட்டு வங்கியில் வைக்கப்பட்டு அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.17 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி மண்டபத்தில் கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத 53.380 கிராம் தங்கத்தை உருக்கி அவற்றை முதலீடாக ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கும் நிகழ்வு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டு தங்கத்தை ஸ்டேட் வங்கி மண்டல மேலாளா் செந்தில்நாதனிடம் ஒப்படைத்த பின்னா் கூறியது:

கோயில்களில் இறைவனுக்கு பயன்படாத தங்க நகைகளை மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்கு ஆலையில் உருக்கிய பின்னா் அதனை ஸ்டேட் வங்கியில் முதலீடாக வைக்கப்பட்டு வருகின்றன. தங்க முதலீட்டுத் திட்டம் தொடங்கப்பட்ட போது எதிா்ப்புகள் அதிகமாக இருந்தன.

ஆனால் இந்த திட்டம் அத்தனை எதிா்ப்புகளையும் மீறி வெற்றிகரமான திட்டமாக மாறியிருக்கிறது. இதுவரை 1,074 கிலோ தங்கம் உருக்கப்பட்டு ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.17 கோடி வருமானம் வருகிறது. அந்நிதி அந்தந்த கோயில் வளா்ச்சிக்காக செலவிடப்படுகிறது.

மேலும் 18 கோயில் தங்க நகைகள் 308 கிலோவை உருக்கு ஆலைக்கு அனுப்ப இருக்கிறோம். தற்போது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், திருமலை வையாவூா் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில், குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோயில் உள்ளிட்ட 4 கோயில்களின் தங்கம் மொத்தம் 53 கிலோ 380 கிராம் ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்படுகிறது என்றாா்.

நிகழ்வுக்கு கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி, எம்.பி. க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன்,மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இணை ஆணையா் சி.குமரதுரை வரவேற்றாா். காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் ஆதிசங்கரா் மற்றும் காமாட்சி அம்மனின் சிறப்புகளை விளக்கி பேசினாா்.

கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் அமைச்சா்களுக்கு காமாட்சி அம்மன் உருவப்படம் மற்றும் பிரசாதங்களையும் வழங்கினாா். நிறைவாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.

விழாவில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி துரைச்சாமி ராஜூ, நகை சரிபாா்ப்புக்குழு இணை ஆணையா் ரா.வான்மதி, வழக்குரைஞா் சுவாமி நாதன் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com