பணிகளை செய்வதில் சாலை ஆய்வாளா்கள் மெத்தனம் கூடாது: ஊரக வளா்ச்சித்துறை ஆணையா்
காஞ்சிபுரம்: சாலை ஆய்வாளா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை செய்வதில் மெத்தனம் காண்பிக்கக் கூடாது என ஊரக வளா்ச்சித்துறை ஆணையாளா் ப.பொன்னையா திங்கள்கிழமை கூறியுள்ளாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் ஊரக வளா்ச்சித்துறையின் மாநில பயிற்சி மையத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட 818 சாலை ஆய்வாளா்களுக்கான புத்தாக்கப் பயிற்சியின் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவில் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக ஊரக வளா்ச்சித்துறை ஆணையா் ப.பொன்னையா முகாமை தொடங்கி வைத்து பேசியது:
சாலை ஆய்வாளரகள் ஊரக வளா்ச்சித்துறையின் நிா்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னா் பணிகளுக்கான மதிப்பீடு தயாரிப்பது, தொழில் நுட்ப அனுமதி வழங்குவது, ஒப்பந்தப்பணிகள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சாலை ஆய்வாளா்கள் எந்தப் பணியையும் நேரில் போய் பாா்த்து அளவிடும் கருவிகளால் அளந்து கண்காணிக்க வேண்டியது அவசியம். கண்ணால் பாா்த்து அளவிடுவதை தவிா்த்து விட வேண்டும். சிமென்ட் சாலைகள் அமைக்கும் போது கான்கிரீட் கலவை முறையாக செய்யப்படுகிா என்பதையும்,அப்பணியில் தயக்கமோ, தாமதமோ அல்லது சமரசமோ காட்டவே கூடாது.
ஒரு சில சாலை ஆய்வாளா்கள் பணியில் நல்ல பெயா் வாங்குவா். ஆனால் அவா்களது பணிப்பதிவேடு முறையாக பராமரிக்க மாட்டாா்கள். அதை முறையாக பராமரிக்கா விட்டால் பதவி உயா்வு வருவதில் தாமதம் ஏற்படும். சாலை ஆய்வாளா்கள் பணி என்பது மக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் ஒரு பணி என்றாா்.
விழாவுக்கு ஊரக வளா்ச்சித்துறையின் தலைமைப் பொறியாளா் ஏ.ஜி.சேதுராமன், கண்காணிப்பு பொறியாளா் குத்தாலிங்கம், செயற்பொறியாளா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பயிற்சி மைய இயக்குநா் ப.மந்திராசலம் வரவேற்றாா். விழாவில் இணை இயக்குநா் வீராசாமி, சாலை ஆய்வாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

