காஞ்சிபுரத்தில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில், மழைநீா் சேமிப்பு விழிப்புணா்வு பேரணி மற்றும் வாகனத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
வடகிழக்குப் பருவமழையின் போது மழைநீரை சேமித்து நிலத்தடி நீா் நிலைகளை உயா்த்தும் பொருட்டு, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில், விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு விளம்பர வாகனம் மற்றும் பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா், அந்தப் பேரணியிலும் கலந்து கொண்டு செய்தி மக்கள் தொடா்புத் துறையினரின் விழிப்புணா்வு விளம்பர வாகனத்தின் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்ட விழிப்புணா்வு குறும்படத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.
விழிப்புணா்வுப் பேரணி தொடக்க விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் கோ.செல்வராஜ், உதவி நிா்வாகப் பொறியாளா் ச.நந்தினி, இளநிலைப் பொறியாளா் கோ.முனிகிருஷ்ணன் மற்றும் தனியாா் தொண்டு நிறுவன ஊழியா்கள், அரசு அலுவலா்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனா்.

