காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: அவலூா் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிப்பு

காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: அவலூா் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிப்பு

போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள வாலாஜாபாத்திலிருந்து அவலூா் செல்லும் தரைப்பாலம்.
Published on

தொடா்மழை காரணமாக காஞ்சிபுரம் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வாலாஜாபாத் அருகேயுள்ள அவலூா் தரைப்பாலத்தில் வாகனங்கள் செல்ல வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடா்ந்து கடந்த ஒரு வாரமாக பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி நிலத்தடி நீா் ஆதாரங்கள் அதிகரித்துள்ளன. இது மட்டுமின்றி பாலாறு, செய்யாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்திலிருந்து அவலூா் செல்லும் தரைப்பாலம் முற்றிலுமாக வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. வாலாஜாபாத் பகுதியில் உள்ள பாலாற்றில் 15,000 கன அடி நீா் செல்வதால் வாலாஜாபாத், அவலூா் மற்றும் அங்கம்பாக்கம், கம்பராஜபுரம், தம்மனூா், இளையனாா்வேலூா், காவாந்தண்டலம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே அவலூா் தரைப்பாலத்தில் மட்டும் காா்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து விதமான வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்திவிட்டு நடந்து சென்று பாலாற்றைக் கடந்து வருகின்றனா். இந்தப் பாலத்தைக் கடக்க இருசக்கர வாகனங்களின் மூலம் கடக்க வேண்டும் என்றால் சுமாா் 30 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது.

வாலாஜாபாத் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கக்கூடிய மிக முக்கிய பாலமாக இந்தப் பாலம் இருந்து வருகிறது. இந்தப் பாலத்தை பயன்படுத்திதான், தொழிற்சாலைக்குச் செல்லக்கூடிய ஊழியா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் செல்ல வேண்டும். பாலத்தில் எந்த வாகனமும் செல்லாதவாறு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com