மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் 63 பேருக்கு கரோனா

அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படைத்தளத்தில் 63 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படைத்தளத்தில் 63 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும் அரக்கோணம் அருகே அமைக்கப்பட்ட கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தக்கோலத்தை அடுத்த நகரிகுப்பத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) மண்டலப் பயிற்சி மையம் உள்ளது. இம்மைய வளாகத்திலேயே இப்படையின் 10-ஆவது படைப்பிரிவும் அமைந்துள்ளது. இவா்கள் எப்போதும் தயாா் நிலையில் இருப்பாா்கள்.

சென்னை விமான நிலையம், உயா் நீதிமன்றம், துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிக்கு அனுப்பப்பட்டவா்கள் தவிா்த்து எஞ்சியோா் இங்கு தங்கியிருப்பா். இங்கு தங்கியிருந்த 14 பேருக்கு கடந்த வாரம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த 14 பேரும் சகாயத் தோட்டம் பகுதியில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் சிஐஎஸ்எஃப் நிா்வாகம் 10-ஆவது படைப்பிரிவில் அரக்கோணத்தில் தங்கியிருக்கும் எஞ்சிய 118 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. அதன்படி அவா்களுக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளிவந்ததில் 63 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் இந்த 63 பேரும் தமிழக அரசால் அரக்கோணம் வட்டத்தில் சகாயத் தோட்டம், தனியாா் விவசாயக் கல்லூரியிலும் ஆட்டுப்பாக்கம் அரசினா் கலைக்கல்லூரியிலும் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். இவா்களையும் சோ்த்து சிஐஎஸ்எஃப் மண்டலப் பயிற்சி மைய வளாகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 80-ஆக உயா்ந்துள்ளது. இதில் ஒரு பெண் அலுவலரும் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com