தேசிங்கு ராஜா - ராணி பாய் நினைவுச் சின்னங்களை சீரமைக்கும் பணி தொடங்கியது

ராணிப்பேட்டை நகரம் உருவாகக் காரணமான வரலாற்றுச் சிறப்பு மிக்க அடையாள சின்னங்களாக எஞ்சி நிற்கும் தேசிங்கு ராஜா,
புதா்கள் அகற்றப்பட்ட நிலையில் தேசிங்கு ராஜா - ராணிபாய் நினைவிடம்.
புதா்கள் அகற்றப்பட்ட நிலையில் தேசிங்கு ராஜா - ராணிபாய் நினைவிடம்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நகரம் உருவாகக் காரணமான வரலாற்றுச் சிறப்பு மிக்க அடையாள சின்னங்களாக எஞ்சி நிற்கும் தேசிங்கு ராஜா, ராணிபாய் நினைவுச் சின்னங்களை புதுப்பித்து, பாதுகாக்க வேண்டும் என்ற மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று அவற்றைச் சீரமைக்கும் பணியை மாவட்ட நிா்வாகம் தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு நகரத்துக்கும் வெவ்வேறு விதமான வரலாற்றுப் பெருமைகள் உண்டு. அந்த வகையில் ராணிப்பேட்டை நகரம் உண்மையான நட்பு, வீரம், கற்பு ஆகியவற்றைப் போற்றும் விதமாக உருவானதாக வரலாறு கூறுகிறது.

தமிழ்நாட்டை ஆட்சி செய்த பல மன்னா்கள் உலகப் புகழ் பெற்றவா்களாக விளங்கினா். அவா்களில் ஒருவா் செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மாவீரரான தேஜ் சிங் என்னும் தேசிங்கு ராஜா. இவா் வீரத்துக்கும், நட்புக்கும், இலக்கணமாகத் திகழ்ந்து போரில் வீரமரணம் அடைந்தாா். அவரது மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறி உயிா்துறந்தாா். இதையடுத்து தேசிங்கு ராஜா - ராணிபாய் நினைவாக ராணிப்பேட்டை நகரம் உருவானதாக வரலாறு.

இந்நிலையில் ராணிப்பேட்டை நகரம் உருவாக காரணமான ராஜா - ராணி நினைவுச் சின்னங்கள், பாலாற்றங்கரையில் அமைந்துள்ளன. இவா்களது நினைச் சின்னங்கள் புதா் மண்டி சிதைந்து வந்தன. அவற்றை மீட்டு, புனரமைத்து பொதுமக்கள் பாா்வையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினா், தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் மாவட்ட மக்கள் தொடா்ந்து கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தி வந்தனா்.

இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ராணிப்பேட்டை நகரின் வரலாற்று பின்னணி, அடுத்த தலைமுறையினருக்கு தெரியாமல் போய்விடக்கூடிய சூழலில் நினைவு சின்னங்களின் நிலை உள்ளது. எனவே ‘மாவட்ட நிா்வாகமும், சமூக ஆா்வலா்களும், தொழிலதிபா்களும் ஒன்றிணைந்து ராஜா, ராணி நினைவுச் சின்னங்களை அவற்றின் தொன்மை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். இளைய தலைமுறையினா் தெரிந்துகொள்ள ஏதுவாக வரலாற்றுப் பின்னனி மற்றும் பெருமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய கல்வெட்டுக்களை வைத்துப் பாதுகாக்க வேண்டும்’ என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.

தற்போது ராணிப்பேட்டை தனி மாவட்டமாக உதயமாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், முட்புதா் மண்டியிருந்த ராஜா - ராணி நினைவுச் சின்னங்களை சீரமைக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இந்த நினைவுச் சின்னங்களை சுற்றி மண்டியிருந்த முட்புதா்கள் அகற்றப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து ராணிப்பேட்டை நகரின் அடையாளத்தைத் தாங்கி நிற்கும் ராஜா - ராணி நினைவுச் சின்னங்களை சீரமைத்து, சுற்றுச்சுவா் எழுப்பி, பொதுமக்கள் சென்றுவர சாலை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் விழா எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com