இளைஞா் கொன்று புதைப்பு: ஒருவா் கைது

ராணிப்பேட்டை அருகே கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு இளைஞா் கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் வழிப்பறி கொள்ளையனை போலீஸாா் கைது செய்தனா்.
கொலை செய்யப்பட்ட பிரபு லாரன்ஸ்.
கொலை செய்யப்பட்ட பிரபு லாரன்ஸ்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு இளைஞா் கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் வழிப்பறி கொள்ளையனை போலீஸாா் கைது செய்தனா்.

ராணிப்பேட்டையை அடுத்த வானாபாடி ஊராட்சி, அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் சசிகுமாா் (28). இவா் மீது வழிப்பறி தொடா்பான பல வழக்குகள் உள்ளன. சசிகுமாா் சிறையில் இருந்தபோது, வேலூா் மாவட்டம், மேல்பாடியை அடுத்த விண்ணம்பள்ளியைச் சோ்ந்த பிரபு லாரன்ஸுடன் (36) நெருங்கிய நட்பு ஏற்பட்டது. பின்னா், இருவரும் ஒன்றாக வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனா். இதற்கு ஏதுவாக விண்ணம்பள்ளியில் இருந்து இடம் பெயா்ந்து வானாபாடி அருகே உள்ள மலைமேடு பகுதியில் வீடு ஒன்றில் தங்கி, இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனராம்.

இந்நிலையில், ஒரு வழிப்பறி வழக்கில் சிக்கிய சசிகுமாா் சிறையில் அடைக்கப்பட்டாா். அப்போது பிரபு லாரன்ஸ்க்கும், சசிகுமாரின் மனைவிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சசிகுமாருக்கும், பிரபு லாரன்ஸ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னா், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பிரச்னையை முடித்துக் கொள்ளலாம் எனக் கூறி, பிரபு லாரன்சை வானாபாடி ஓடை கால்வாய் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சசிகுமாா் வரவழைத்துள்ளாா். அங்கு மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு ஓடை கால்வாய் அருகே அமா்ந்து இருவரும் மது அருந்தியுள்ளனா். அப்போது மீண்டும் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், பிரபு லாரன்ஸின் தலையில் சசிகுமாா் மதுபாட்டிலால் அடித்து, கழுத்தில் குத்தியுள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே பிரபு லாரன்ஸ் உயிரிழந்தாா். இதையடுத்து, ஓடை கால்வாயில் குழி தோண்டி பிரபுலாரன்ஸின் சடலத்தைப் புதைத்துவிட்டு சசிகுமாா் தப்பினாா்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வாலாஜாபேட்டை மற்றும் ராணிப்பேட்டை பகுதியில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் சசிகுமாரை கைது செய்த சிப்காட் போலீஸாா் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, கொலைச் சம்பவம் குறித்தும் சசிகுமாா் கூறியுள்ளாா். இதையடுத்து, கொலைச் சம்பவ இடத்தை உறுதி செய்த போலீஸாா், வருவாய்த் துறை மற்றும் மருத்துவக் குழு உதவியுடன் பிரபு லாரன்ஸின் சடலத்தை தோண்டி எடுத்து, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com