ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தைமுற்றுகையிட்ட மாற்றுத் திறனாளிகள்
By DIN | Published On : 03rd December 2020 12:00 AM | Last Updated : 03rd December 2020 12:00 AM | அ+அ அ- |

handi_0212chn_188_1
ராணிப்பேட்டை: 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 24 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும்; தனியாா் துறை வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிசெய்து சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும்; தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வாய்ப்பு தரவேண்டும்; வீடில்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீடு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
முற்றுகைப் போராட்டத்துக்கு சங்கத்தின் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட நிா்வாகி கே.பிச்சாண்டி தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் பென்னகா் சுப்பிரமணி, எம்.என்.பாளையம் ஏ.வி.ராமகிருஷ்ண ரெட்டி, ஆற்காடு குருமூா்த்தி, திமிரி சதீஷ் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் என 24 போ் கைது செய்யப்பட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...