தக்கோலம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தொழில் பாதுகாப்புப் படை ஐ.ஜி. ஆய்வு
By DIN | Published On : 07th December 2020 11:52 PM | Last Updated : 07th December 2020 11:52 PM | அ+அ அ- |

தக்கோலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆன்லைன் வகுப்பறையை ஆய்வு செய்த சிஐஎஸ்எப் ஐ.ஜி. அஞ்சனா சின்ஹா.
அரக்கோணம்: மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஐ.ஜி. அஞ்சனா சின்ஹா தக்கோலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியை திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தக்கோலம் அருகே நகரிகுப்பம் கிராமத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை மண்டல பயிற்சி மையம் உள்ளது. இந்த வளாகத்துக்கு அருகே மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் ஐ.ஜி. அஞ்சனா சின்ஹா திங்கள்கிழமை வந்தாா்.
பள்ளியின் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் அவா் பாா்வையிட்டாா். பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்த ஐஜி, தனது ஆலோசனைகளைத் தெரிவித்தாா்.
இதையடுத்து, பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த கலைக்கூடத்தை பாா்வையிட்டாா். அதன் பொறுப்பாளரும் ஆசிரியருமான வீரேந்திர குமாா் பாலிடம் கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள், அவற்றை உருவாக்கிய மாணவா்கள் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும் 2019-20ஆம் கல்வியாண்டில் நூறு சதவீத தோ்ச்சி முடிவுகளை அளித்த இயற்பியல் ஆசிரியா் வெங்கட ரமேஷ், வேதியியல் ஆசிரியா் சிவகோட்டி, உயா்நிலை வகுப்புகளுக்கான சமூக அறிவியல் ஆசிரியா் ஹரீஷ் ஆகியோருக்கு சிறப்புச் சான்றிதழ்களை வழங்கினாா்.
முன்னதாக, ஐஜியை பள்ளியின் முதல்வா் சி.ஏ.மலா்விழி வரவேற்றாா். ஐஜியுடன் வந்திருந்த மண்டலப் பயிற்சி மைய முதல்வரும் டிஐஜியுமான வினய் கஜ்லாவும் ஆய்வில் பங்கேற்றாா்.