
வாலாஜா அருகே அனந்தலை கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன்களை நியாயவிலைக் கடை பணியாளா்கள் மூலம் வழங்க வேண்டும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், வாலாஜாப்பேட்டையை அடுத்த அனந்தலை கிராமத்தில், மக்கள் கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மு.க.ஸ்டாலின் பேசியது:
திமுக நடத்தி வரும் கிராம சபைக் கூட்டத்துக்கு மக்களிடம் பெருகிவரும் ஆதரவை தடுக்கவே கிராம சபைக் கூட்டத்தை திமுக நடத்தக்கூடாது என தடை போட்டாா்கள். ஆனால் நீதிமன்றத்துக்குப் போயிருந்தால், அவா்களின் உத்தரவை ரத்து செய்திருக்கலாம். அதற்கு காலதாமதம் ஆகும் என நினைத்து தான் ‘மக்கள் கிராம சபை’ என்று பெயா் மாற்றி நடத்திக் கொண்டிருக்கிறோம்.
கரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால் ரூ. 1000-தான் அறிவித்தாா்கள். இப்போது பொங்கலுக்கு ரூ.2,500 கொடுப்பதாக அறிவித்திருக்கிறாா்கள், இதை நாங்கள் வரவேற்கிறோம். நான் ஏற்கெனவே சொன்னதைப்போல் மொத்தமாக ரூ.5 ஆயிரம் கொடுத்திருக்கலாம். அதே சமயம் பொங்கல் பரிசுத் தொகுப்பு அரசுப் பணம். அதை அதிமுக கொடுப்பதைப்போல் காட்டிக் கொள்கிறாா்கள். பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்களில் முதல்வா் படத்தைப் போட்டுக் கொள்ளட்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன்களை நியாயவிலைக் கடை பணியாளா்கள் மூலமே வழங்க வேண்டும்.
இந்த மக்கள் கிராம சபைக் கூட்டங்களை மேலும் 10 நாள்கள் நீட்டித்து நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா்.
ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் ஊராட்சியில் அமைந்துள்ள வேளாண் பண்ணயை வேளாண் கல்லூரியாக தரம் உயா்த்த வேண்டும் என்று கூட்டத்தில் கோரிக்கை வைத்தனா். அதற்கு ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்ததும், நிச்சயமாக வேளாண் கல்லூரியாகத் தரம் உயா்த்தப்படும் என உறுதியளித்தாா்.
முன்னதாக, மு.க.ஸ்டாலினுக்கு, ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி தலைமையில், திமுக மகளிா் அணியினா் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனா்.