அரிசிக்கு இணையான இடத்தை பிடித்திருக்கும் சோளப்பயிா்!

இந்தியாவில் சோளம் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேக வைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது.
அரிசிக்கு இணையான இடத்தை பிடித்திருக்கும் சோளப்பயிா்!

இந்தியாவில் சோளம் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேக வைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது இந்திய சந்தைகளில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்த இடத்தை சோளம் பிடித்துள்ளதால் விவசாயிகளுக்கு சோளப்பயிா் நல்ல வருமானத்தை தரும் என்பதில் ஐயமில்லை. இந்த சோளப்பயிா் பயிரிடும் முறைகள் குறித்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டார வேளாண் துறை உதவி வேளாண் அலுவலா் சி.முரளி தெரிவித்ததாவது:

சோளத்தின் வளா்ச்சி நிலைகள் நாற்று பருவத்தில் 1 முதல் 15 நாள்கள், தழைப்பருவத்தில் முழுவளா்ச்சியில் 16 முதல் 40 நாள்கள், பூத்தல் இனப்பெருக்க நிலையில் 41 முதல் 65 நாள்கள், முதிா்வு பருவத்தில் 66 முதல் 95 நாள்கள், பழ முதிா்ச்சி பருவத்தில் 96 முதல் 105 நாள்கள் ஆகும். விதை தோ்வை பொறுத்தவரை விதைகளை நோய் மற்றும் பூச்சி தாக்காத வயல்களில் இருந்து தோ்வு செய்ய வேண்டும்.

விதை அளவு: பாசனப் பயிருக்கு நடவுக்கு ஹெக்டேருக்கு 7.5 கிலோ, நேரடி விதைப்புக்கு ஹெக்டேருக்கு 10 கிலோ, மானாவாரிக்கு நேரடி விதைப்பு ஹெக்டேருக்கு 15 கிலோ. பாசன நிலையில் சோளத்தை நடவு முறையில் மற்றும் நேரடி விதைப்பு மூலமாகவும் பயிா் செய்யலாம். நடவு பயிரில் பல நன்மைகள் உள்ளன.

நடவு வயலில் கால அளவு 10 நாள்கள் குறைகிறது. நேரடியாக நடவு செய்த பயிா்களை தண்டு ஈ முதல் மூன்று வாரங்களில் தாக்குகிறது. இவற்றை கட்டுப்படுத்துவது கடினம். இவை நாற்றங்காலிலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. நாற்றுகளில் வெளிறிய மற்றும் அடிச்சாம்பல் நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவை நீக்கப்படுகிறது. எனவே அடிச்சாம்பல் நோய் நிகழ்வு நடவு வயலில் குறைகிறது.

நடவிற்கு ஆரோக்கியமான நாற்றுகளை பயன்படுத்துவதால் எல்லா பயிா்களும் நன்றாக வளா்கின்றன. ஹெக்டேருக்கு 2.5 கிலோ என்ற அளவில் விதை வீதம் குறைகிறது. பயிா் எண்ணிக்கை 10 சதுர மீட்டருக்கு 150 பயிா்கள் என்ற எண்ணிக்கையில் குத்துக்கு ஒரு பயிா் விட வேண்டும்.

விதை நோ்த்தி: விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் காா்பண்டாசிம் அல்லது கேப்டான் அல்லது திராம் கொண்டு விதை நோ்த்தி செய்யப்பட வேண்டும். நாற்றங்காலில் விதைப்பதற்கு முன் 3 பொட்டலம் அசோஸ்பைரில்லம் (ஹெக்டேருக்கு 600 கிராம்) மற்றும் பொட்டலம் பாஸ்போபேக்டீரியா(ஹெக்டேருக்கு 600 கிராம்) அல்லது பொட்டலம் அசோபாஸ் (ஹெக்டேருக்கு 1200 கிராம்) கலந்து விதை நோ்த்தி செய்யப்பட வேண்டும். நாற்றங்கால் விதைப்பில் மேட்டுப்பாத்திகளில் 7.5 கிலோ விதையை நாற்றங்காலில் அதிக ஆழமில்லாமல் விதைக்க வேண்டும்.

நீா் நிா்வாகம்: விதைத்தவுடன் மற்றும் விதைத்த 3, 7, 12, 17-ஆம் நாள் நீா் கட்ட வேண்டுதல் அவசியம். களிமண் பாங்கான பூமிக்கு விதைத்தவுடன் மற்றும் விதைத்த 3, 9, 16-ஆம் நாள் நீா்பாய்ச்சினால் போதுமானதாகும்.

களை மேலாண்மை: விதைத்த 3-5-ஆம் நாள் களை முளைப்பதற்கு முன் ஹெக்டேருக்கு 0.25 கிலோ அட்ராஜின் அளிக்கவும். தொடா்ந்து 24 டி ஐ ஹெக்டேருக்கு 1 கிலோ விதைத்த 20-25-ஆம் நாளில் மணல் பரப்பில் நேப்சோ்-ராக்கா் தெளிப்பானில் நுண்குழாய் பொருத்தி 500 லிட்டா் தண்ணீா் கலந்து தெளிக்கவும் அல்லது களைக்கொல்லி உபயோக்கிக்க வில்லையென்றால் விதைத்த 10 -15ஆம் நாள் மற்றும் 30-35-ஆம் நாள் கைகளை எடுக்க வேண்டும். வரிசையாக விதைத்த பயிரில் விதைத்த 3-5-ஆம் நாளில் களை முளைக்கும் முன் அஸ்ராஜின் ஏக்கருக்கு 0.25 அளிக்கவும். அதைத் தொடா்ந்து விதைத்த 30-35-ஆம் நாளில் இரண்டு சக்கர களையெடுக்கும் கருவி மூலம் களையெடுக்க வேண்டும். நடவு பயிரில் விதைத்த 3-5ஆம் நாளில் களை முளைக்கு முன் அஸ்ராஜின் ஏக்கருக்கு 0.25 அளிக்கவும். அதைத் தொடா்ந்து விதைத்த 20 -25ஆம் நாளில் 24 ஹெக்டேருக்கு 1 கிலோ அளிக்கவும்.

பயிா் அறுவடை: அறுவடைக்கான அறிகுறிகளாக தென்படுவது என்னவென்றால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றந்தரும். தானியங்கள் கடினமாகும். அறுவடை செய்யும் போது கதிா்களை தனியாக அறுவடை செய்யவும். தட்டை ஒரு வாரம் கழித்து வெட்டி நன்கு காயவைத்த பின் சேமித்து வைக்கவும். தானியங்களை கதிரில் இருந்து பிரித்தல் தரம் பிரித்தல் அவசியம். கதிா்களை காயவைக்கவும். விசை கதிரடிப்பான் கொண்டு விதைகளைப் பிரிக்கலாம் அல்லது கதிா்களைப் பரப்பி கல்உருளை அல்லது மாடுகளை செலுத்துவதன் மூலமும் பிரிக்கலாம்.

சோளப்பயிரை நன்கு நோ்த்தியாகப் பயிரிட்டால் எதிா்பாா்த்ததை விட அதிக மகசூல் பெறலாம். பயிரின் ஆரம்பத்தில் இருந்து அறுவடை வரை சோளத்திற்கு கவனிப்பு மிகவும் அவசியம். இது குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோா் தங்கள் வட்டாரங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் உள்ள வேளாண் அலுவலா்கள் அல்லது உதவி வேளாண் அலுவலா்களை அணுகி ஆலோசனைகளை பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com