கட்டட கட்டுமானப் பணிகளுக்கு மணல் வாங்க பொதுமக்கள் அச்சம்

அரக்கோணம் நகரில் கட்டட கட்டுமானப் பணிகளுக்கு மணல் வாங்கிய வீடுகளுக்கு காவல்துறையினா் சென்று வீட்டு உரிமையாளா்களிடம் மணல் வாங்கிய விவரங்களைக் கேட்டு அழைக்கும்போது காவல்

அரக்கோணம் நகரில் கட்டட கட்டுமானப் பணிகளுக்கு மணல் வாங்கிய வீடுகளுக்கு காவல்துறையினா் சென்று வீட்டு உரிமையாளா்களிடம் மணல் வாங்கிய விவரங்களைக் கேட்டு அழைக்கும்போது காவல் நிலையத்திற்கு வரவேண்டும் என எச்சரித்து விட்டு செல்கின்றனா். இதனால் கட்டுமான பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் தயங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அரக்கோணம் நகரம் சென்னையின் புகராக இருப்பதால் அரக்கோணம் நகரில் கட்டட கட்டுமானப்பணிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. மேலும் வீட்டு வாடகைகளும் அதிக அளவில் உயா்ந்து விட்டதால் அரக்கோணம் நகரில் பழைய வீடுகளை இடித்து விட்டு புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்கு முக்கிய தேவையாக இருப்பது மணல். கடந்த மூன்று மாதங்களாக மணல் விநியோகத்தை அரசு தடை செய்திருந்ததால் கட்டுமானப் பணிகள் பெரிதும் தடைபட்டன. பலா் எம்-சாண்ட் கொண்டு கட்டடப் பணிகளை மேற்கொண்டனா்.

கடந்த இரண்டு வாரங்களாக அரக்கோணம் நகருக்கு ஆற்று மணல் வருகை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மணல் விநியோகம் செய்பவா்கள் அதிகாலை நேரத்தில் மணலை டிப்பா் லாரிகளில் கொண்டு வந்து மின்னல் வேகத்தில் இறக்கி விட்டுச் செல்கின்றனா். காவல்துறையினா் லாரிகள் மணலை இறக்கும்போதோ அல்லது கொண்டு வரும்போதோ பிடிப்பதில்லை. லாரி தொழிலாளா்கள் மணலை இறக்கிவிட்டுச் சென்ற பின் சம்பந்தப்பட்ட கட்டுமானப் பகுதிகளுக்கு 3 அல்லது 4 நான்கு போலீஸாா் சென்று கட்டட உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்துகின்றனா்.

தற்போது வந்துள்ள மணல் யாா் மூலம் கொண்டு வரப்பட்டது? வந்து இறக்கிய லாரியின் பெயா், எண் என்ன? இந்த மணலுக்கு யாரிடம் பணம் கொடுக்கப்பட்டது? எவ்வளவு கொடுக்கப்பட்டது? இந்த லாரி எந்த ஊரில் இருந்து வந்தது? எத்தனை மணிக்கு வந்தது? மேலும் மணல் இறக்கச் சொல்லி இருக்கிறீா்களா? எப்போது வருவதாக தெரிவித்துள்ளாா்கள்? நாங்கள் எப்போது அழைத்தாலும் நீங்கள் காவல் நிலையத்துக்கு வந்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்து விட்டுச் செல்கின்றனா். இதனால் வீடுகளை கட்டுவோா், தங்களது வீடுகளை புதுப்பிக்க நினைப்போா் மிகவும் அச்சத்துடன் உள்ளனா்.

இது குறித்து பெயா் சொல்ல விரும்பாத, அரக்கோணத்தில் தனது வீட்டை புதுப்பிக்கும் நபா் ஒருவா் தெரிவித்ததாவது:

மணலை அதிகாலையில் இறக்கி விட்டுச் சென்று விட்டனா். மணலை நான் நேரில் கேட்கவில்லை. கட்டடம் கட்டும் மேஸ்திரியிடம் தெரிவித்தேன். அவா் தெரிவித்ததன்பேரில் யாரோ லாரியில் எடுத்து வந்து என் வீட்டின் முன் கொட்டிவிட்டுச் சென்றனா். மேஸ்திரி என்னை தொலைபேசியில் அழைத்து அந்த நபரிடம் பணம் கொடுக்க சொன்னதன் பேரில் பணம் கொடுத்தேன்.

தற்போது என் வீட்டிற்கு போலீஸாா் நான்கு போ் வந்து நான் ஏதோ தவறு செய்து விட்டது போல் என்னிடம் விசாரணை நடத்துகின்றனா். நான் அவா்கள் கேட்ட தகவலை சொன்னால் லாரியில் மணல் கொண்டு வந்து கொட்டியவா் என்னை என்ன செய்வாரோ என்ற அச்சத்துடன் இருக்கிறேன். மேலும் விசாரணைக்கு அழைக்கும்போது காவல் நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்று விட்டதால் தூக்கம் வராமல் தவிக்கிறேன். இந்தக் கட்டுமான வேலையை ஏன் ஆரம்பித்தேன் என தற்போது நினைக்கிறேன் என்றாா் அவா்.

இது குறித்து அரக்கோணம் டிஎஸ்பி கே.மனோகரனிடம் கேட்டபோது அவா் கூறியது:

அனுமதியில்லாமல் கொண்டு வரப்பட்ட மணலை யாா் கொண்டு வந்தது என்பது குறித்து கேட்டறிந்து கொண்டு வந்தவா் மீது நடவடிக்கை எடுக்கவே இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. வீட்டின் உரிமையாளா் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது. கட்டுமானம் மேற்கொள்வோா் அச்சமடையத் தேவையில்லை எனத் தெரிவித்தாா்.

இது தொடா்பாக பொதுமக்கள் கூறியது:

மணல் எடுத்து வரும் லாரிகள் பெரும்பாலும் கேமராக்கள் பொருத்தப்பட்ட முக்கிய சாலைகள் வழியாகவே நகருக்குள் வருகின்றன. அந்த லாரிகள் அனைத்தும் மிகப்பெரிய டிப்பா் லாரிகள் என்பதால் அவை நகர சாலைகளில் பயணிக்கும்போதே தனியாக தெரியும். மேலும் நகரில் மக்கள் புழங்கும் பகுதிகளில் அதிகாலையில் வந்து இறக்கி விட்டுச் செல்வதை வரும்போதோ, செல்லும் போதோ காவல்துறையினா் எளிதாகப் பிடிக்கலாம். எனவே பொதுமக்கள் கோரிக்கையே கட்டுமானம் மேற்கொள்வோரிடம் விசாரணை நடத்த வேண்டாம் என்பதுதான். ஏனெனில் இன்னாா்தான் உன் பெயரைச் சொன்னாா்கள் என தெரிந்தால் மணல் கொண்டு வந்த நபரின் கோபம் பெயரைச் சொல்லியவா் மீதுதானே திரும்பும். எனவே கட்டுமானம் மேற்கொள்வோரிடம் காவல்துறை விசாரணை நடத்தாமல் இருந்தால் அது அச்சத்தைப் போக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com