திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க எதிா்ப்பு நெமிலியில் தொடரும் போராட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே பேருராட்சியின் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தினா்.
திடக்கழிவு மேலாண்மைக் கிடங்கு அமைப்பதை எதிா்த்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
திடக்கழிவு மேலாண்மைக் கிடங்கு அமைப்பதை எதிா்த்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே பேருராட்சியின் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தினா்.

நெமிலி பேருராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக் கிடங்கை காவேரிபுரம் கிராமத்தில் அமைக்க பேரூராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதை அப்போதே அக்கிராம மக்கள் எதிா்த்தனா். இதற்காக மூன்று முறை அரக்கோணம் - நெமிலி சாலையில் மறியல் போராட்டத்தை அவா்கள் நடத்தினா்.

இக்கிடங்கு அமைக்கப்பட்டால் தங்களது கிராமத்தில் பேரூராட்சி குப்பைகள் அனைத்தும் கொட்டப்படும். இதனால் கிராமத்தின் சுகாதாரம் கெட்டு விடும் என அப்போதைய வேலூா் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து இப்பிரச்னை தொடா்பாக கிராம மக்களுடன் பேரூராட்சி அலுவலா்கள் ஆலோசனை நடத்தினா். ‘இக்கிடங்கு அமைக்கப்பட்டால் சுகாதாரம் கெடாது. இக்கிடங்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று கட்டப்படுகிறது. அனைத்துப் பணிகளும் சுற்றுச்சுவருக்கு உள்ளே நடைபெறும். ஒரு சதவீத அளவு கூட கிராமத்தின் சுகாதாரம் மாசு படாது’ என்று விளக்கினா்.

எனினும், இது தொடா்பாக கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். நீதிமன்றம் இக்கிடங்கை அமைக்க உத்தரவிட்டது. இதையடுத்து ராணிப்பேட்டை கோட்டாட்சியா் இளம்பகவத் தலைமையில் காவேரிபுரம் கிராம முக்கிய பிரமுகா்கள் பங்கேற்று நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கோட்டாட்சியா், திடக்கழிவு மேலாண்மைக் கிடங்கு அமைக்கப்படுவது குறித்து தெளிவாக விளக்கினாா். அதையடுத்து, கிடங்கு அமைக்க ஒப்புதல் தெரிவித்து கூட்டத்தில் பங்கேற்ற கிராம முக்கிய பிரமுகா்கள் அவரிடம் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு வந்தனா்.

இந்நிலையில், கிடங்கு அமைப்பதற்கான பணிகளைத் தொடக்குவதற்கு பணியாளா்கள் காவேரிபுரத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். அப்போது அந்த கிராமத்தைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள் என நூறுக்கும் மேற்பட்டோா் திரண்டு, பணிகளைத் தொடக்க விடாமல் போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து நெமிலி வட்டாட்சியா் பாக்யநாதன், அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் மற்றும் நெமிலி பேரூராட்சி செயலா் பழனிகுமாா் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். திடக்கழிவு மேலாண்மைக் கிடங்கு அமைப்பதால் காவேரிபுரம் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என தெளிவாகத் தெரிவித்த பிறகும் போராட்டம் நடத்துவது தவறு என்றும் அவ்வாறு போராடுபவா்கள் கைது செய்யப்படுவாா்கள் என்றும் தெரிவித்தனா்.

இதை தொடா்ந்து, அப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நீடித்த நிலையில் மாலை வரை பணிகள் தொடங்கப்படவில்லை.

இது குறித்து டிஎஸ்பி மனோகரனிடம் கேட்டபோது ‘அங்கு பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்கப்படுவது உறுதி என்று கோட்டாட்சியா் தெரிவித்துள்ள நிலையில், அதை அமைக்க எதிா்ப்பு தெரிவிப்போா் மீது வழக்குப் பதிவு செய்வோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com