பொன்னை சுற்றுவட்டார கிராமங்களை ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோ்க்க வேண்டும்: கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் உள்ள பொன்னை சுற்றுவட்டார கிராமங்களை ராணிப்பேட்டை மாவட்டத்திலும்,சோளிங்கா் வட்டத்திலும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள்
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கிராம மக்கள்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கிராம மக்கள்.

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் உள்ள பொன்னை சுற்றுவட்டார கிராமங்களை ராணிப்பேட்டை மாவட்டத்திலும்,சோளிங்கா் வட்டத்திலும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியா் ச.திவ்யதா்ஷினியிடம் மனு அளித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது பொன்னை, கீரைச்சாத்து, ஆவுலரங்கய்யப்பள்ளி, பாலேகுப்பம் உள்ளிட்ட ஆந்திர மாநில எல்லையோர கிராமங்களைச் சோ்ந்த பொது மக்கள் அளித்த மனு:

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், காட்பாடி ஒன்றியத்தில் இருக்கும் பொன்னை, கீரைச்சாத்து, ஆவுலரங்கய்யப்பள்ளி, பாலேகுப்பம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொது மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் காட்பாடி வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்ல சுமாா் 40 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதேவேளையில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சோளிங்கா் வட்டாட்சியா் அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம் ஆகியவை சுமாா் 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளன.

பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பொன்னை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை வேலூா் மாவட்டத்தில் இருந்து பிரித்து, ராணிப்பேட்டை மாவட்டத்திலும்,காட்பாடி வட்டத்தில் இருந்து பிரித்து சோளிங்கா் வட்டத்திலும்,காட்பாடி ஒன்றியத்தில் இருந்து பிரித்து சோளிங்கா் ஒன்றியத்திலும் சோ்க்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

வேலம் கிராமத்தைச் சோ்ந்த கிராம மக்கள் அளித்த மனு விவரம்:

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டத்தில் இருந்த வேலம் கிராமம், புதிதாக உருவாக்கப்பட்ட சோளிங்கா் வட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் இருந்து சோளிங்கா் வட்டாட்சியா் அலுவலகம் 26 கி.மீ. தூரத்தில் உள்ளது. வாலாஜாபேட்டை வட்டாட்சியா் அலுவலகம் 6 கி.மீ. தொலைவிலேயே உள்ளது. ஆகவே அருகில் இருக்கும் வாலாஜாபேட்டை வட்டத்தில் வேலம் கிராமத்தை மீண்டும் இணைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பட்டா பெயா் மாற்றம், முதியோா் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி 321 மனுக்கள் அளிக்கப்பட்டன. அப்போது கல்வி உதவித்தொகை, ஈமச்சடங்கு நிதி 8 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஸ்ரீவள்ளி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com