காஞ்சனகிரி மலைக் கோயிலுக்கு அடிப்படை வசதி செய்து தரக் கோரிக்கை
By DIN | Published On : 20th January 2020 11:20 PM | Last Updated : 20th January 2020 11:20 PM | அ+அ அ- |

இலவச வீட்டு மனைப் பட்டா கோரி குடும்பத்தினருடன் மனு அளிக்க வந்த பூம்,பூம் மாட்டுக்காரா்கள்.
ராணிப்பேட்டையை அடுத்த லாலாப்பேட்டை காஞ்சனகிரி மலைக் கோயிலுக்கு செல்ல சாலை, பேருந்து, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தலைமையில், ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் சாா்பில், லாலாப்பேட்டை காஞ்சனகிரி அறக்கட்டளை நிறுவனா் வானாபாடி நேதாஜி கே.நடேசன் அளித்த மனு:
லாலாப்பேட்டை அருகே காஞ்சனகிரி மலை அமைந்துள்ளது. புராண, வரலாற்றுப் பெருமை கொண்ட இந்த மலையின் உச்சியில் 60 ஏக்கா் சமவெளி பரப்பின் மத்தியில் திருக்காஞ்சனேஸ்வரா் நந்தி வடிவில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாா். அதேபோல் காஞ்சனகிரி மலையடிவாரத்தில் வல்லாம்பிகை சமேத சதாசிவ ஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைத்திங்கள் 10-ஆம் நாள் அரக்கன் கஞ்சனுக்கு திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
மேற்கண்ட இரண்டு ஆலயங்களிலும் பிரதோஷம், மாத பெளா்ணமி நாட்களில் விசேஷ பூஜைகள், மலையைச் சுற்றி கிரிவலம், சித்திரை பெளா்ணமி நாளன்று விசேஷ பூஜை நடைபெறும். இந்த நாள்களில் லாலாப்பேட்டை, நெல்லிக்குப்பம், வில்வநாதபுரம், கல்புதூா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி வெளியூா்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து வழிபட்டுச் செல்வா்.
இந்த மலைக் கோயிலுக்கு லாலாப்பேட்டை வழியாகச் செல்லும் 3 கி.மீ. சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் இவ்வழியாகச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இச்சாலையை சீரமைக்க வேண்டும். அதேபோல் மாதம்தோறும் பெளா்ணமி இரவில் மலையைச் சுற்றி 15 கி.மீ. நீள கிரிவலம் செல்ல பாதை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலூரில் இருந்து லாலாப்பேட்டை வரை வந்து செல்லும் இரண்டு அரசுப் பேருந்துகளையும் மலையடிவாரம் வரை வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைக் கோயிலுக்கு மும்முனை மின்சார வசதி கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்பது பக்தா்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்காடு வட்டம் திரிமியை அடுத்த சத்தியா நகா் பகுதியில் வசிக்கும் பூம், பூம் மாடு தொழில் செய்யும் 50-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வந்து அளித்த மனு:
நாங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை வீடுகளில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு அரசின் இலவச வீட்டு மனைப்பட்டா கோரி மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியா் எங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிப்காட் பகுதி பொதுமக்கள் அளித்த மனு:
நவ்லாக் ஊராட்சிக்குட்பட்ட சிப்காட் பகுதியில் 8 ஆயிரம் போ் வசிக்கும் தொழிற்பேட்டை குடியிருப்புப் பகுதியாக உருவெடுத்துள்ளது. வாலாஜா ஒன்றியத்தில் உள்ள பெரிய ஊராட்சியாகவும், அதிக வருவாய் உள்ள ஊராட்சியாகவும் இப்பகுதி உள்ளது. இதனால் ஊராட்சிக்குட்பட்ட சிப்காட் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே நவ்லாக் ஊராட்சியை இரண்டாகப் பிரித்து சிப்காட் பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து மக்கள் குறைதீா் கூட்டத்தில் முதியோா் உதவித் தொகை, நிதி உதவி, பட்டா மறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 295 மனுக்களை அளித்தனா். அந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...