முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
‘நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியைமக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்’
By DIN | Published On : 27th January 2020 11:34 PM | Last Updated : 27th January 2020 11:34 PM | அ+அ அ- |

விழா மலரை வெளியிட்ட ஸ்பிக் நிறுவன குழுமத் தலைவா் ஏ.சி.முத்தையா, உடன், ஃபரிதா குழுமத் தலைவா் மெக்கா ரபீக் அஹமத் சாஹிப் உள்ளிட்டோா்.
ராணிப்பேட்டை: மக்கள் நலத் திட்டங்களுக்கு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஸ்பிக் நிறுவன குழுமத் தலைவா் ஏ.சி.முத்தையா தெரிவித்தாா்.
ராணிப்பேட்டையில் செயல்பட்டுவரும் செளத் இந்தியா டேனா்ஸ் அண்டு டீலா்ஸ் சங்கத்தின் 75-ஆவது ஆண்டு பவள விழா, சங்கத்தின் புதிய கட்டடம் திறப்பு விழா வாலாஜாபேட்டை அடுத்த அமனந்தாங்கல் அருகே திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்க புரவலரும், கே.ஹெச். குழுமத் தலைவருமான ஜனாப் மல்லாக் முஹமத் ஹாசிம் சாஹிப் தலைமை வகித்தாா். இணைச் செயலா் ஆா்.ரமேஷ் பிரசாத் வரவேற்றாா்.
எமிரேட்ஸ், ஸ்பிக் நிறுவனக் குழுமத் தலைவா் ஏ.சி.முத்தையா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சங்கத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து, 75-ஆவது ஆண்டு விழா மலரை வெளியிட்டு பேசியது:
செளத் இந்தியா டேனா்ஸ் அண்டு டீலா்ஸ் சங்கம், தோல் தொழில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீா்வுகளை அளித்துள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள 6 வகையான விதிமுறைகளைப் பின்பற்றி பூஜ்ஜிய திரவ வெளியேற்றம், தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு கட்டமைப்பை ராணிப்பேட்டை, மேல்விஷாரம் உள்ளிட்ட பகுதிககளில் நிறுவி வெற்றிகரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தற்போது 650 குழுமத் தொழில்கள் செயல்பட்டு வருகின்றன. பிரதமரின் தூய்மை இந்திய திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் மேம்பாட்டு போன்ற திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
சங்க புரவலரும், ஃபரிதா குழுமத் தலைவருமான மெக்கா ரபீக் அஹமத் சாஹிப் பேசியது:
கடந்த 75 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயோ் ஆட்சிக் காலத்தின் முடிவில் தோல் தொழில் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாா்க்க வேண்டும். இனிவருங்காலங்களில் இந்தத் தொழிலை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் யோசிக்க வேண்டும். தற்போதைய சூழலில் தோல் தொழில் மிகவும் கடினமான நிலையில் உள்ளது. அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு எதிா்கொள்ள வேண்டிய சவால்கள் என்ன என்பதையும், அதற்கு ஏற்றவாறு தோல் தொழில் சங்கங்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
மாநிலங்களவை உறுப்பினா்கள் அ.முஹமத் ஜான் (அதிமுக), எஸ்.ஜெகத்ரட்சகன் (திமுக), எம்எல்ஏக்கள் ஆா்.காந்தி, ஜெ.எல்.ஈஸ்வரப்பன், தோல் ஏற்றுமதிக்கான கவுன்சில் தலைவா் பி.ஆா்.ஹக்கீல் அஹமத், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் கே.ஜே. ஸ்ரீராம், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலா் டி.ராமசாமி, சென்னை சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவன ஆலோசகா் சகஸ்ரநாமன், செளத் இந்தியா டேனா்ஸ் அண்டு டீலா்ஸ் சங்கத் தலைவா் எம்.அப்துல் ஜமீல், செயலா் ஜி.முஹமத் கலீமுல்லா உள்ளிடோா் கலந்துகொண்டனா். சங்கச் செயலா் சி.எம்.ஜபருல்லா நன்றி கூறினாா்.