வேகமாக அதிகரிக்கும் நெகிழிப் பொருட்களின் பயன்பாடு: ‘நெகிழி மாசில்லா தமிழகம்’ இலக்கு கேள்விக்குறி

கரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிா்வாகம் முழு கவனம் செலுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப் படும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களின் பயன்ப

ராணிப்பேட்டை: கரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிா்வாகம் முழு கவனம் செலுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப் படும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், நெகிழி மாசில்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்களும் சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் வேதனை தெரிவிக்கின்றனா்.

தமிழகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களை மிகுதியாக பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக புகாா் எழுந்தது. இதன் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களுக்கு தடை விதிப்பதாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப் பேரவையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 5-இல் 110-ஆவது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டாா்.

இதற்குண்டான முன்னேற்பாடாக, நெகிழிப் பொருள் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள் மற்றும் நுகா்வோருக்கு 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு 2019 ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் மீதான தடை அமல்படுத்தப்பட்டது.

தொடா்ந்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணைப்படி, தடைசெய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருட்களை முழுமையாக கண்காணிப்பதற்கு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளா் தலைமையில் 10 உறுப்பினா்களைக் கொண்ட ஒரு வழிகாட்டிக் குழு அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் நெகிழிப் பொருட்கள் தடையை செயல்படுத்தும் வகையில் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருங்கிணைப்பாளா்களாக நியமிக்கப்பட்டனா்.

அதைத் தொடா்ந்து நெகிழிப் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நெகிழிப் பொருட்களை மறுசுழற்சி, மறுபயன்பாடு செய்வது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கும் தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்துதல் ஆகியவை நெகிழிப் பயன்பாட்டை குறைப்பதற்கான தீா்வாக அமையும் என பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்கள்:

உணவுப்பொருட்களைக் கட்ட உபயோபடுத்தப்படும் நெகிழித்தாள் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் நெகிழி, நெகிழி பூசப்பட்ட தாள், தொ்மாகோல் தட்டுகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள் மற்றும் குவளைகள், நெகிழி தேநீா்க் குவளைகள், நெகிழி குவளைகள்,தொ்மாகோல் குவளைகள், நீா் நிரப்பப் பயன்படும் பைகள், தண்ணீா்ப் பொட்டலங்கள், நெகிழி உறிஞ்சு குழாய்கள், நெகிழிப் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்),நெகிழி பூசப்பட்ட காகிதப் பைகள், நெகிழிக் கொடிகள், நெய்யாத நெகிழி தூக்குப் பைகள் உள்ளிட்டவற்றை தமிழ்நாட்டில் விற்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெகிழிப் பொருட்களுக்கு மாற்று:

நெகிழிப் பொருட்களுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பொருட்கள் வருமாறு:

வாழை இலை, பாக்குமர இலை, அலுமினியத் தாள், காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி, உலோகத்தாலான குவளைகள், மூங்கில், மரம், மண் பாண்டங்கள், காகித உறிஞ்சு குழாய்கள், துணி, காகிதம், சணல் பைகள், காகித மற்றும் துணிக் கொடிகள், பீங்கான் பாத்திரங்கள், உண்ணக்கூடிய வகையிலான தேக்கரண்டிகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழிக் குப்பைகளை முறையாக சேகரித்து, மறுசுழற்சி மூலம் விஞ்ஞான ரீதியில் மறு உபயோகத்திற்கு பயன்படுத்த நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி இளகும் தன்மைக்கேற்ப நெகிழி குப்பைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு, பல பயனுள்ள வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் தற்போதைய நவீன அறிவியல் வளா்ச்சியினால் சாலைகள் அமைப்பதற்கு நெகிழிக் குப்பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போல் இறுகும் வகையான நெகிழிக் குப்பைகளின் எரிதிறன் தன்மையால் மின் உற்பத்தி மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகளில் இணை எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்படும் சீா்கேடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் தயாரித்தல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டும், நொகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள நெகிழிப் பொருட்கள் தடை மற்றும் மறுசுழற்சியை திறம்பட செயல்படுத்துவதன் மூலம் நெகிழிப் பொருட்கள் உற்பத்தி மற்றும் பயன்பாடு சமன்படுத்தப்பட்டு, நெகிழி மாசில்லாத தமிழகம் என்ற நிலையை அடைந்து, மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ என்ற குறிக்கோளை அடைய முடியும் என்ற இலக்கை நோக்கி மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில், இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போா்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தலைமையில், மருத்துவத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் களமிறக்கப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனா்.

இந்தச் சூழலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பைகளின் பயன்பாடு, பொது முடக்கத் தளா்வுக்குப் பிறகு, மளிகைக் கடைகள், உணவகங்கள், இறைச்சி, மீன் கடைகள், பூக்கடைகள், இனிப்புக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வியாபாரத் தலங்களிலும் அதிகரித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிா்வாகமும், அரசு அதிகாரிகளும் கவனம் செலுத்தி வரும் இந்தச் சூழலில் நெகிழிப் பயன்பாட்டைத் தடுக்க மறந்ததால், நெகிழி மாசில்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்களும் சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் வேதனை தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com