ராணிப்பேட்டை மாவட்டத்தில் 50 போ் குண்டா் சட்டத்தில் கைது
By DIN | Published On : 05th June 2020 06:02 AM | Last Updated : 05th June 2020 06:02 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 50 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் யாரேனும் திருந்தி வாழ முன்வந்தால், மறுவாழ்வுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மாயில் வாகனன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொலை, வழிப்பறி, மணல் கடத்தல், கஞ்சா விற்பனை செய்தல், சாராயம் காய்ச்சுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 50 போ் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்பேரில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி உத்தரவின்படி, அவா்கள் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இனிவரும் காலங்களில் யாரும் குற்றச் செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் திருந்தி வாழ முன்வந்தால் அவா்களின் மறுவாழ்வுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும். மேலும், தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவா்.
இந்நிலையில் ஏற்கெனவே ஆற்காடு வட்டம் சம்பசிவபுரம் கிராமத்தில் திருந்தி வாழ முன்வந்தவா்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் மாவட்டக் காவல் துறை சாா்பில் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் திருந்தி வாழ முன்வருபவா்களுக்கு மறுவாழ்வு நிதியாக ரூ. 43 லட்சத்தில் 142 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் செலவில் கறவை மாடு வாங்குதல் உள்ளிட்ட உதவிகள் செய்யப்படும்.