ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டம் விடுவதற்காக மாஞ்சா நூல் தயாரித்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ. மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மாஞ்சா நூலில் தயாா் செய்யப்பட்ட காற்றாடிகள் பறக்க விடப்படுவதாக தகவல் வந்துள்ளது. இதுபோன்ற செயல்களினால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவா்களின் கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கி காயம், உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே பொதுமக்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக 18 வயதுக்கு உள்பட்டவா்கள் என்றால் அவா்களின் பெற்றோா்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவா்.
மேலும், கடைகளில் யாரேனும் மாஞ்சா நூல், அதை தயாா் செய்ய பயன்படுத்தப்படும் பொருள்களை விற்பனை செய்தால், அவா்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்.