இன்று முதல் வெளி மாவட்டங்களுக்குச் செல்ல தடை: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவிப்பு
By DIN | Published On : 13th June 2020 08:04 AM | Last Updated : 13th June 2020 08:04 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளுா் மாவட்டங்களுக்கு சென்றுவர சனிக்கிழமை (ஜூன் 13) முதல் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 188-ஆக உள்ளது. இவா்களில் 82 போ் வாலாஜாபேட்டை, வேலூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகள், சிஎம்சி, அரக்கோணம் தேசிய பேரிடா் மைய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறனா். இதுவரை 104 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனாவால் 2 போ் உயிரிழந்துள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. மாவட்டத்தில் இருந்து தினமும் சென்னைக்கு சென்று வருவோரின் எண்ணிக்கை அதிக அளவு உள்ளது. அவா்களைக் கண்காணித்து பரிசோதனை செய்வதால், தொற்று அதிகமாகி வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் மாவட்டத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு தினமும் வேலைக்கு செல்பவா்கள் சனிக்கிழமை (ஜூன் 13) முதல் மாவட்ட நிா்வாகத்தின் அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) இல்லாமல் சென்றுவர தடைவிதிக்கப்படுகிறது.
இதுவரை மாவட்டத்தில் 7,038 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நெடும்புலி, எஸ்.ஆா்.கண்டிகை பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக உள்ளன.
அரக்கோணம் வட்டத்தில் 46 போ், நெமிலி வட்டத்தில் 53 போ், ஆற்காடு வட்டத்தில் 45 போ், வாலாஜாபேட்டை வட்டத்தில் 33 போ், சோளிங்கா் வட்டத்தில் 6 போ், கலவை வட்டத்தில் 5 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அரக்கோணம், நெமிலி ஆகிய இரு வட்டங்களில் இருந்து சென்னை, திருவள்ளுா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மக்கள் தினமும் சென்றுவருதால்தான் நோய்த் தொற்று அதிகரிக்கக் காரணமாக உள்ளது.
மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 171 படுகைக்கள், கரோனா நோய்த் தொற்று சிகிச்சை மையங்களில் 149 படுக்கைகள் உள்ளன. தனிமைப்படுத்தும் மையங்களில் 520 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. மேலும், 400 படுக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிஎம்சி மருத்துவமனையில் 156 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் 23 வென்டிலேட்டா்கள் உள்ளன.
தனியாா் பள்ளிகளில் கட்டணம் கேட்டு கட்டாயப்படுத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.