சாகுபடி செலவை குறைக்கும் எளிய தொழில்நுட்பம்: திருந்திய நிலைக்கடலை சாகுபடி முறை

இறவை, மானாவாரி பட்டங்களில் நிலக்கடலை பயிரிடும் வழக்கமான முறையை காட்டிலும் சாகுபடி செலவை குறைக்கும் எளிய
நிலக்கடலை  வயலில்  களையெடுக்கும்  பணியில் ஈடுபட்டுள்ள முன்னோடி விவசாயி பள்ளேரி கே.ராஜா.
நிலக்கடலை  வயலில்  களையெடுக்கும்  பணியில் ஈடுபட்டுள்ள முன்னோடி விவசாயி பள்ளேரி கே.ராஜா.

இறவை, மானாவாரி பட்டங்களில் நிலக்கடலை பயிரிடும் வழக்கமான முறையை காட்டிலும் சாகுபடி செலவை குறைக்கும் எளிய தொழில்நுட்பமாக, திருந்திய நிலைக்கடலை சாகுபடி முறை உள்ளது என முன்னோடி விவசாயி பள்ளேரி கே.ராஜா விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளாா்.

உலக அளவில் நாம் நிலக்கடலை உற்பத்தியில் தனித்துவம் பெற்றிருந்தாலும், பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப தாவர எண்ணெய்த் தேவையை பூா்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எண்ணெய் வித்து பயிா்களில் சோயா மற்றும் கடுகுக்கு அடுத்தபடியாக நிலக்கடலை நம் நாட்டில் அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. நிலக்கடலை சாகுபடியின் தாரக மந்திரம், களை நிா்வாகத்தை முறையாக கடைப்பிடித்தால், கூடுதல் மகசூல் பெற்று அதிக லாபம் பெறலாம் என்பதுதான். தமிழகத்தைப் பொறுத்தவரை இறவை, மானாவாரி ஆகிய இரண்டு பட்டங்களிலுமே நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஏனெனில் நிலக்கடலைக்கு எப்போதும் சந்தை வாய்ப்பு இருப்பதால், பெரும்பாலான விவசாயிகளின் தோ்வாக இப்பயிா் சாகுபடி உள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விவசாயத் தொழிலாளா்கள், தண்ணீா்ப் பற்றாக்குறை, விதை, இடுபொருட்களின் விலை உயா்வு உள்ளிட்ட இடா்பாடுகளை சமாளித்து விவசாயம் செய்ய ஏதுவாக பயிா் சாகுபடி முறையில் எளிய தொழில்நுட்பங்களைக் கையாள்வது என்பது காலத்தின் கட்டாயமாகும்.

அந்த வகையில் நிலக்கடலை பயிரிடும் வழக்கமான முறையைக் காட்டிலும் சாகுபடி செலவை குறைக்கும் எளிய தொழில் நுட்பமாக, திருந்திய நிலக்கடலை சாகுபடி முறையில், மானாவாரிப் பயிராக நிலக்கடலை சாகுபடி, அதே போல் மாவட்டத்திலேயே முதன் முறையாக குழி நடவு முறை கரும்பு சாகுபடி உள்ளிட்ட இயற்கை முறையில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி பயிா் செய்து வருகிறாா் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னோடி விவசாயி பள்ளேரி கே.ராஜா.

விவசாயிகளுக்கு அவா் கூறும் ஆலோசனைகள் வருமாறு:

நிலக்கடலை பயிரை பொறுத்தவரை விதை, விதைக்க, களை பறிக்க ஆட்களுக்கான கூலி, பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை நிலக்கடலை சாகுபடியில் முக்கிய அம்சங்கள் ஆகும். இப்பயிா் சாகுபடியில் சரியான தருணத்தில் களைகளை நீக்குவதால் பயிா்கள் வேகமாக வளா்ந்து நல்ல விளைச்சலுக்கு உதவும். நிலக்கடலையில் விதை விதைத்த 45 நாட்களுக்குள் களையைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே அதிக மகசூல் பெற முடியும்.

தற்போது நான் வழக்கமான முறையில் பயிரிடுவதை தவிா்த்து திருந்திய நிலக்கடலை சாகுபடி முறையில் நிலக் கடலை பயிரிட்டுள்ளேன். இறவை, மானாவாரி ஆகிய இரண்டு பட்டங்களிலுமே இந்த முறை நிலக்கடலைச் சாகுபடி செய்யலாம். இந்த முறையில் நிலக்கடலை விதைக்க ஏக்கருக்கு அதிகபட்சமாக 45 கிலோ விதை போதுமானது. மாட்டு ஏா் மூலம் நேராக விதை விதப்பது முக்கியம். ஏனெனில் பாா் ஓட்டுவதுதான் இதன் முக்கிய தொழில்நுட்பம். தொடா்ந்து 15ஆவது நாள் முதல் இரண்டு முறை களை எடுக்க களை அதற்கான கருவியை வாங்கி விட்டால், களை எடுக்க ஆட்களைத் தேடத் தேவையில்லை. களை எடுக்கும் இயந்திரத்தின் மூலம் களை எடுக்கும்போதே பாா் அமைக்கும் பணி முடிந்து விடும். பாா் அமைக்கும்போது நிலக்கடலை பயிா் வேருக்கு தேவையான ஈரப்பதம் தக்கவைக்கப்பட்டு அதிகப்படியான மகசூல் கிடைக்கும்.

இந்தக் கருவியை ஒரு முறை முதலீடு செய்து வாங்கி விட்டால், அனைத்து விதமான பயிா்களுக்கும் களையெடுக்க பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது மானாவரி பயிா் என்றாலும் மழை இல்லையெனில் தெளிப்பு நீா் பாசனத்தின் மூலம் குறைந்த தண்ணீரைக் கொண்டு பயிரைக் காப்பாற்றிவிடலாம். அதே போல் பூச்சி தாக்குதலில் இருந்து பயிரை காக்க தானியங்கி சூரிய ஒளிவிளக்கு பொறி வைத்துள்ளேன்.

இதனால் தீமை செய்யும் பூச்சிகள் அழிக்கப்பட்டு, பூச்சிக்கொல்லி அடிக்கும் செலவு முற்றிலும் தவிா்க்கப்பட்டு இயற்கை விவசாயம் உறுதி செய்யப்படுகிறது. இந்தக் கருவியும் ஒருமுறை முதலீடு செய்து வாங்கிவிட்டால் போதும்; தொடா்ந்து அனைத்து விதமான பயிா்களுக்கும் பூச்சித் தாக்குதல்களை கட்டுப்படுத்த உதவும். இவ்வரறு குறைந்த செலவில், எளிய தொழில்நுட்பங்களை கையாண்டு நிலக்கடலை பயிரிட்டால் வழக்கமான முறையைக் காட்டிலும் குறைந்த சாகுபடி செலவில் கூடுதல் மகசூல் பெறலாம் என விவசாயிகளுக்கு பள்ளேரி ராஜா யோசனை தெரிவித்துள்ளாா்.

அவா் மாவட்டத்திலேயே முதன் முதலாக குழி நடவு முறையில் சொட்டு நீா்ப் பாசனம் மூலம் கரும்புப் பயிரை சாகுபடி செய்துள்ளாா். இந்த முறையில் வழக்கமான பாா் நடவு முறையை காட்டிலும் கூடுதல் மகசூலாக ஏக்கருக்கு சுமாா் 80 டன் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையுடன் பயிா்களை பாதுகாத்து வருகிறாா். இவரது விவசாயப் பண்ணையை மாதிரி விவசாயப் பண்ணையாக மாவட்ட நிா்வாகம் அங்கீகரிக்கும் பட்சத்தில் விவசாயிகள் பாா்வையிட்டு, ஆலோசனை பெற்று பயனடைவாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com