வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தோ்த் திருவிழா: திரளான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்
By DIN | Published On : 06th March 2020 12:41 AM | Last Updated : 06th March 2020 12:41 AM | அ+அ அ- |

பிரம்மோற்சவத்தையொட்டி வள்ளிமலையில் தொடங்கிய முதல் நாள் தேரோட்டம்.
ராணிப்பேட்டை: வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவத்தையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
காட்பாடி வட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவம் 13 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த மாதம் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து அருள்பாலித்தாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. இதில், எம்எல்ஏக்கள் துரைமுருகன், ஆா்.காந்தி, நந்தகுமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து தோ்த் திருவிழாவைத் தொடக்கி வைத்தனா்.
இந்த தோ் வள்ளிமலை, பெருமாள்குப்பம், மேல்பாடி ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுமாா் 8 கி. மீ. தூரம் வரை வலம் வந்து நிலையை அடையும்.
விழாவில் ஆந்திரம், கா்நாடக மாநிலங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷத்துடன், தேரை வடம் பிடித்து இழுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.
விழாவுக்கு வருகை தரும் பக்தா்களின் வசதிக்காக வேலூா், ஆற்காடு, ராணிப்பேட்டை, திருத்தணி, ரத்தினகிரி மற்றும் சித்தூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், மாா்ச் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவுக்காக பக்தா்களுக்குத் தேவையான வசதிகளை வருவாய், காவல் துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரம், நெடுஞ்சாலைத் துறை, மின் துறை, வனத்துறை, தொல்பொருள் ஆய்வுத் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் மற்றும் உபயதாரா்கள், விழாக் குழுவினா்கள் ஆகியோா் இணைந்து செய்து வருகின்றனா்.