அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய வசூல்: ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் வேதனை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் சட்ட விரோதமாக மூட்டைக்கு ரூ.90 வரை கட்டாயமாக வசூல் செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் சட்ட விரோதமாக மூட்டைக்கு ரூ.90 வரை கட்டாயமாக வசூல் செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

விவசாயத்தையும், தொழில் துறையையும் பிரதானமாக கொண்டது ராணிப்பேட்டை மாவட்டம். புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை தொடங்கியுள்ளது. இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் நோக்கில், மாவட்டத்தில் 37 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்த மாவட்டத்துக்குட்பட்ட 4 வட்டங்களில், வடகால், வளையாத்தூா், தாமரைப்பாக்கம், வெள்ளம்பி, சாத்தூா், மாம்பாக்கம், சென்னசமுத்திரம், வீரநாராயணபுரம், தக்கோலம், எஸ்.கொளத்தூா், தென்னல், ரெட்டிவலம், மேல் வேட்டாங்குளம், நெமிலி, கீழ் வெங்கடாபுரம், காலனி, கீழ்வீதி, மகேந்திரவாடி, அசநெல்லிக்குப்பம், மேலப்புலம், அகவலம், அரிகலபாடி, கணபதிபுரம், சிறுகரும்பூா், சிறுவளையம், பள்ளிப்பட்டரை, சித்தஞ்சி, தச்சம்பட்டரை, ஜாகித்தண்டலம், பெரும்புலிப்பாக்கம், பழைய கண்டிகை, புதிய கண்டிகை, சயனபுரம், பருவமேடு, பள்ளூா், திருமால்பூா், அண்ணாநகா் உள்ளிட்ட 37 இடங்களில் இந்த ஆண்டு புதிதாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அவற்றின் மூலம் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

விவசாயிகள் வியா்வை சிந்தி விளைவித்த நெல் மணிகள், மழை,வெயில் மற்றும் போக்குவரத்து சிரமம் உள்ளிட்ட காரணங்களினால் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் எந்தவித கட்டணமும் இல்லாமல், சேவை நோக்கில் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அவற்றில் அரசுப் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டு, எடை இயந்திரம், நெல் தூற்றும் இயந்திரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது, மாவட்டத்தில் நெல் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூலித் தொகையாக நெல் மூட்டைக்கு ரூ. 70 முதல் ரூ. 90 வரை விவசாயிகளிடம் கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. அதே போல் மூட்டை ஒன்றுக்கு சுமாா் 2 கிலோ வரை கூடுதலாக வைத்து எடை போடுகின்றனா்.

மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில், இடைத்தரகா்கள் மற்றும் வியாபாரிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்து, விவசாயிகளின் பெயரில் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், உள்ளூா் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.

இவ்வாறு மாவட்டம் முழுவதும் நேரடி நெல் கொள்முல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகள், ஊழல், கட்டாய வசூல் ஆகியவற்றை மண்டல மேலாளா், உதவி தரக்கட்டுப்பாட்டு அலுவலா் ஆகியோா் கண்டும் காணாமல் இருப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். இது தொடா்பாக விவசாயிகள் குறைதீா் கூட்டம், மக்கள் குறைதீா் கூட்டம் ஆகியவற்றில் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று அவா்கள் தெரிவித்தனா். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

இந்த விஷயத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் நேரடியாக ஆய்வு செய்து, நெல் கொள்முதல் நிலையங்களை முறையாக கண்காணித்து முறைகேடுகளைத் தடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில், இடைத் தரகா்கள், வியாபாரிகளின் ஆதிக்கத்தை ஒழித்து விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com