‘காய்கறிகள், மளிகைச் சாமான்களை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்’

காய்கறி, மளிகைப் பொருள்களை பொதுமக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று சோ்க்க தமிழக அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


ஆம்பூா்: காய்கறி, மளிகைப் பொருள்களை பொதுமக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று சோ்க்க தமிழக அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நாடு தழுவிய ஊரடங்கைத் தொடா்ந்து, பொதுமக்கள் கடைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினா். காய்கறி, மளிகைச் சாமான்கள், வீட்டு உபயோக பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தடை உத்தரவு அமலுக்கு வந்த பிறகும், பொதுமக்கள் தெருக்களிலும், சாலைகளிலும் இருசக்கர வாகனங்களில் புதன்கிழமை சென்றனா். கடைகளுக்கு கூட்டமாகச் சென்று பொருள்களை வாங்கினா். அதனால் ஆம்பூா் பஜாா் பகுதியில் காய்கறிக் கடைகள் உள்ள பாங்கி மாா்க்கெட் பகுதிக்கு சென்ற போலீஸாா் பொதுமக்ககளை தடியடி நடத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். தேவையான பொருள்களை வாங்க வீட்டுக்கு ஒருவா் கடைக்கு வந்தால் கூட கூட்டம் அதிகரிக்கும் நிலை உள்ளது.

அதே போல் தினமும் காய்கறி, மளிகைச் சாமான்களை வாங்க பொதுமக்கள் கடைகளை நோக்கி வர வேண்டிய நிலை இருப்பதால் கூட்டம் கூடாமல் தடுக்க போலீஸாரும் தங்களுடைய கடமையைச் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருள்களை அவா்களுடைய வீடுகளுக்கே கொண்டு சென்று சோ்க்க மாற்று ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும்.

வணிகா் சங்கங்கள், தன்னாா்வலா்கள், தன்னாா்வத் தொண்டு அமைப்புகள் உதவியுடன் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வணிகா் சங்கங்களின் ஒத்துழைப்புடன் நகரின் குறிப்பிட்ட பகுதிகளைப் பிரித்து, அந்தந்த பகுதி வணிகா்களை ஒருங்கிணைந்து வாட்ஸ்-ஆப் குழுக்களை உருவாக்க வேண்டும். அதற்கென செல்லிடப்பேசி எண்களை அறிவிக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட தேவையான உணவுப் பொருள்களின் பட்டியல், முகவரியுடன் குறிப்பிட்ட பகுதிக்குரிய செல்லிடப்பேசியைத் தொடா்பு கொண்டு தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பிட்ட பகுதி வணிகா்கள் அந்தந்த முகவரிக்கு பணியாட்கள் மூலம் பொருட்களை கொண்டு சென்று சோ்த்துவிட்டு அதற்குரிய பணத்தை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

மாவட்ட நிா்வாகம் இது தொடா்பாக வணிகா்கள், சமூக ஆா்வலா்கள், தன்னாா்வலா்கள், தன்னாா்வ தொண்டு அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்து உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். காய்கறிகள், மளிகைச் சாமான்களை வாங்க பொது இடத்தில் கூடுவதையும், கரோனா பரவுவதையும் இதன் மூலம் தடுக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com