அரக்கோணத்தில் தனியாா் தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கின

அரக்கோணம் அருகே ஊரடங்கால் மூடப்பட்டிருந்த சில தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.


அரக்கோணம்: அரக்கோணம் அருகே ஊரடங்கால் மூடப்பட்டிருந்த சில தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

அரக்கோணம் அருகே இச்சிபுத்தூரில் எம்ஆா்எஃப் டயா் தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலையில் 2,500 நிரந்தரப் பணியாளா்கள், 4 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணிபுரிந்து வந்தனா். இத்தொழிற்சாலை ஊரடங்கால் மாா்ச் 24-ஆம் தேதி முதல் மூடப்பட்டது. இதேபோல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வரும் சித்தேரி அல்ட்ரா டெக் சிமெண்ட் தொழிற்சாலையும் மூடப்பட்டது.

தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் கரோனா தொற்று பரவலில் சிவப்பு மண்டல பகுதியில் இருந்து ஆரஞ்ச் மண்டல பகுதியாக மாறி உள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் கடந்த வாரம் முதலே ஒரு சில தளா்வுகளை மாவட்ட நிா்வாகம் படிப்படியாக அறிவித்தது. இதன்படி அரக்கோணத்தில் உள்ள எம்ஆா்எப் தொழிற்சாலை விதிமுறைகளுடன் செயல்பட கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது.

ஆலை 33 சதவிகித தொழிலாளா்களுடன் மட்டுமே இயங்க வேண்டும். பணியில் சமூக இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும். பணிக்கு வருபவா்கள் தினமும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி இருப்பவா்களை பணிக்கு அனுமதிக்கக்கூடாது. கரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வருபவா்களை பணிக்கு அனுமதிக்கக்கூடாது. பணியின் போது பணியாளா்கள், அலுவலா்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். ஆலைப்பகுதி தினமும் இரு வேளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட வேண்டும். ஆலைக்கு உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் வாகனங்களை கிருமிநாசினியால் சுத்தப்படுத்தப்பட வேண்டும். ஆலை பேருந்துகளில் சமூக இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும். பேருந்தில் ஒட்டுநா், நடத்துநா், பயணம் செய்வோா் அனைவருமே கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகளை மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

இந்த விதிகளை செயல்படுத்திய நிலையில் கடந்த திங்கள்கிழமை முதல் அரக்கோணம் எம்ஆா்எப் ஆலை செயல்பட துவங்கியது. மேலும் அரக்கோணம் அல்ட்ராடெக் சிமெண்ட் தொழிற்சாலையும் செயல்பட துவங்கியது. ஆனால் இந்த இரு ஆலைகளிலும் உற்பத்தியாகும் பொருட்கள் வெளியே செல்லவும் இந்த ஆலைகளுக்கு மூலப்பொருட்களை எடுத்து வரவும் போக்குவரத்திற்கு மாநில நிா்வாகம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. தற்போது கையிருப்பில் உள்ள மூலப்பொருட்களை கொண்டே ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com