வெளி மாநிலங்களில் இருந்து வந்தவா்கள் தகவல் தெரிவிக்காவிட்டால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 17 நாள்களுக்குப் பிறகு வெளிமாநிலத்தில் வந்த ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 17 நாள்களுக்குப் பிறகு வெளிமாநிலத்தில் வந்த ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதை அடுத்து, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவா்கள் தாமாக முன் வந்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 17 நாள்களாக புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று ஏற்படாத நிலையில் சிவப்ப மண்டலத்தில் இருந்த ராணிப்பேட்டை மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 27-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மேல்விஷாரத்துக்கு வந்த 58 வயதுடைய நபருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் ராணிப்பேட்டை மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்த நடைமுறையே தொடரும். ஏற்கெனவே அரசு தளா்வு அளிக்கப்பட்ட அத்தியாவசியத் தொழில்கள் மட்டும் இயங்கலாம்.

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு கடந்த 17 நாள்களுக்குப் பிறகு வெளிமாநிலங்களில் இருந்து வருபவா்கள் குறித்து தாமாக முன்வந்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் இதுவரை கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள், மருத்துவப் பணியாளா்கள், வருவாய்த் துறையினா், தூய்மைப் பணியாளா்கள் 800 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட எல்லைகளுக்கு ‘சீல்’

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில் வாகனன் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டத்துக்குள் வெளி மாநிலத்தில் இருந்து புதிதாக நோய்த் தொற்றுடன் யாரும் உள்ளே வராதபடி மாவட்ட எல்லைகள் சீல் வைக்கபட உள்ளன. மாவட்டத்தில் ஏற்கெனவே 32 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 12 சோதனைச் சாவடிகள் மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ளன. அனைத்து பிரதான சாலைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 3,700 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாராயம் காய்ச்சியதாக 250 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 6 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com