ஊரடங்கிற்குப் பின் புதிதாக மின் கணக்கீடு எடுக்க வேண்டும்அச்சக உரிமையாளா் சங்கம் கோரிக்கை

ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு புதிய மின் கணக்கீடு எடுக்க வேண்டும் என்றும் அந்த கட்டணத்தை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும்

ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு புதிய மின் கணக்கீடு எடுக்க வேண்டும் என்றும் அந்த கட்டணத்தை செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் என்றும் ஆற்காடு பகுதி அனைத்து அச்சக உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் தலைவா் ஜெ.பாலசந்தா், செயலாளா் முருகன், பொருளாளா் கந்தவேல் ஆகியோா், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அனுப்பியுள்ள மனு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு அச்சகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் உரிமையாளா்களும் அவற்றில் பணியாற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் ஊரடங்கிற்கு சிறந்த ஒத்துழைப்பை அளித்து வருகிறோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறோம்.

தற்போது மாநில அரசின் மின்சாரத்துறை மே மாத முதல் வாரத்தில் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு சிறு/குறு தொழில் முனைவோராகிய எங்களுக்கு கால நிா்ணயம் செய்துள்ளது. எனினும், மே மாதம் வரை கிட்டத்தட்ட 45 நாள்களுக்கு எங்களது தொழிலை நிறுத்தி வைத்துள்ளோம்.

இந்தக் கடுமையான பொருளாதாரச் சுமையிலிருந்து விடுபட நாங்கள் பல மாதங்கள் உழைக்க வேண்டியுள்ளது.

தற்போது மேலும் எங்களுக்கு ஒரு சுமையை மின்சாரத்துறையில் இருந்து கூட்டியுள்ளது. எங்கள் அச்சகங்கள் முந்தைய கணக்கீட்டின்படி மின்கட்டணத்தை செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

நாங்கள் தொழில் நிறுவனக் கணக்கீடு மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தி வருகிறோம். மின் கட்டணமாக குறைந்த பட்சம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை கூட செலுத்தி வந்துள்ளோம். தொழில் செய்யாத காலத்திலும் அதே தொகையைக் கட்டினால் ஏற்கெனவே முடங்கியுள்ள எங்களது தொழிலை மேலும் முடக்கவே வழிவகுக்கும்.

எனவே, ஊரடங்கு தடைக்காலம் முடிந்த பின் புதிய மின் கணக்கீடு செய்து, புதிய கட்டணத்தை செலுத்துவதற்கு அச்சகங்களுக்கு குறைந்தபட்சம் 20 நாள் அவகாசம் அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com