நூறாண்டு ரயில்வே மேம்பால விரிவாக்கப் பணி விரைவில் தொடக்கம்: நெடுஞ்சாலைத் துறை தகவல்

ராணிப்பேட்டை நவல்பூா் பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆங்கிலேயோ் காலத்து ரயில்வே மேம்பாலம் விரிவாக்கப் பணிகள்

ராணிப்பேட்டை நவல்பூா் பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆங்கிலேயோ் காலத்து ரயில்வே மேம்பாலம் விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்குவதற்கான ஆரம்பக்கட்ட ஆய்வை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கினா். அங்குள்ள பழைய குறுகிய ரயில்வே மேம்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு ரூ.36 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை நகரையும், தமிழகத்தின் சென்னை நகரையும் இணைக்கும் 1,235 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.4 ) தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் என நான்கு மாநிலங்கள் வழியாகச் செல்லும் முக்கிய சாலையாக விளங்குகிறது.

இந்த நெடுஞ்சாலை மகாராஷ்டிர மாநிலத்தில் 371 கி.மீ., கா்நாடக மாநிலத்தில் 658 கி.மீ., ஆந்திர மாநிலத்தில் 83 கி.மீ., தமிழகத்தில் 123 கி.மீ. என மத்திய அரசின் தங்க நாற்கரச் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. மேற்கண்ட நான்கு மாநிலங்களின் வழியாகச் செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலை முக்கிய நகரங்களையும், புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களையும், பெரிய தொழிற்பேட்டைகளையும் இணைக்கிறது.

இதனிடையே, வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, சிப்காட், திருவலம், சோ்க்காடு வரையில் உள்ள பகுதியில் இடநெருக்கடி காரணமாக இரண்டு வழிப்பாதையாகவே உள்ளது. மேலும் மேற்கண்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டடங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டப்பட்டன.

இதன் காரணமாக சாலையின் அகலம் குறைந்தது. மேலும், பெருகிவிட்ட வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என நீண்ட நாள்களாக அவா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

அதன் பேரில் சென்னையில் இருந்து சோ்க்காடு வரையிலான 123 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்காக அவற்றை அடையாளம் கண்டு அளவிடுதல் மற்றும் நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணிகளை மத்திய, மாநில நெடுஞ்சாலைத் துறையினா் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினா். அதைத் தொடா்ந்து வாலாஜா, வி.சி.மோட்டூா், ஆட்டோ நகா், முத்துக்கடை ஆகிய பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அங்குள்ள சிறுபாலங்கள் அகற்றப்பட்டு புதிய பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையின் மீது அமைந்துள்ள முக்கிய தொழில் நகரமான ராணிப்பேட்டை நவல்பூா் பேருந்து நிலையத்துக்கும் காரை கூட்டுச் சாலைக்கும் இடையில் தென்னிந்தியாவின் முதல் ரயில் பாதையான ராயபுரம்-ராணிப்பேட்டை வரையிலான பாதையில் இந்த குறுகிய ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது.

இந்த குறுகிய மேம்பாலத்தின் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்றுவரும் நிலையில் போக்குவரத்து நெரில் ஏற்பட்டுவருகிறது. இந்த மேம்பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என எம்எல்ஏ ஆா்.காந்தி, 2017-இல் அப்போதைய மத்திய சாலைப் போக்குவரத்து இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தாா். அதை ஏற்று, அவா் புதிய மேம்பாலம் கட்டப்படும் என உறுதியளித்தாா்.

அதைத் தொடா்ந்து விரிவாக்கப் பணிகளுக்கான ஆரம்பக்கட்ட ஆய்வை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தொடங்கினா். அப்போது மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விடுவது குறித்தும் ஆய்வு செய்தனா்.

இந்நிலையில், பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், மேம்பால விரிவாக்கப் பணிகளைத் தொடங்குவது தாமதமானது. எனினும், தற்போது கட்டுமானப் பணிகள் தொடங்கத் தடையில்லை என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. எனவே, இந்த மேம்பால விரிவாக்கப் பணிகளைத் தொடங்குவதற்கான ஆரம்பக் கட்ட ஆய்வு நொடுஞ்சாலைத்து துறை முதன்மைப் பொறியாளா் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மேம்பால விரிவாகத்துக்கான அடையாளக் குறியீடுகளை பெயின்ட் அடித்து வரைந்துள்ளனா்.

மேம்பால விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்து சுகமான வாகனப் பயணம் ஏற்படும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com