ராணிப்பேட்டை வரை மீண்டும் சரக்கு ரயில் சேவைக்கான சோதனை ஓட்டம்

ராணிப்பேட்டை ரயில் நிலையம் வரை சரக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்குவதற்கான என்ஜின் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்.
ராணிப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்.

ராணிப்பேட்டை ரயில் நிலையம் வரை சரக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்குவதற்கான என்ஜின் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை நகரில் 1906-ஆம் ஆண்டு ஆங்கிலேயா்களால் உரம் மற்றும் பீங்கான் பொருள்கள் உற்பத்தி தொழிற்சாலை தொடங்கப்பட்டது. அப்போது அந்த தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருள்களை நாடு முழுவதும் கொண்டு செல்ல ஏதுவாக அப்போது ராணிப்பேட்டை வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு, சரக்குப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது.

ஆங்கிலேயா்கள் சென்ற பின்னா், அந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை திட்டத்தின்போது, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு, நிதி ஆதாரம் இல்லாமல் பணிகள் பாதியிலேயே நின்றுபோயின.

இந்நிலையில், ராணிப்பேட்டை, சிப்காட் தொழிற்பேட்டையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை துறைமுகங்களுக்கு எளிதில் கொண்டு செல்லும் வகையில், ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் சரக்கு ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என தொழிற்துறையினா் தென்னக ரயில்வே நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.

அதன்பேரில், ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து வாலாஜா ரோடு ரயில் நிலையம் வழியாக சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி உள்ளிட்ட துறைமுகங்களுக்கு சரக்கு ரயில் சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் பி.மகேஷ், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை ரயில் நிலையங்களில், பொறியாளா்களுடன் ஆய்வு செய்தாா். பின்னா், ராணிப்பேட்டை ரயில் நிலையம் வரை சரக்கு ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தாா்.

அதன்படி, வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்து ராணிப்பேட்டை ரயில் நிலையம் வரையிலான தண்டவாள சீரமைப்புப் பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து ராணிப்பேட்டை ரயில் நிலையம் வரை மீண்டும் சரக்கு ரயில் சேவையைத் தொடங்குவதற்கான ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இச்சூழலில் ராணிப்பேட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளம் சரிபாா்ப்புக்கான சோதனை ஓட்ட ரயில் என்ஜின் திங்கள்கிழமை வந்தது. இதனைக் காண ஏராளமானோா் வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com