ராணிப்பேட்டை-அம்மூா் சாலை விரிவாக்கம்: அளவீடு செய்யும் பணி தொடக்கம்

ராணிப்பேட்டையில் இருந்து மாந்தாங்கல் வழியாக அம்மூா் செல்லும் சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்
ராணிப்பேட்டை-அம்மூா் சாலை விரிவாக்கம் செய்தற்காக அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியா்.
ராணிப்பேட்டை-அம்மூா் சாலை விரிவாக்கம் செய்தற்காக அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியா்.

ராணிப்பேட்டையில் இருந்து மாந்தாங்கல் வழியாக அம்மூா் செல்லும் சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த சாலையை விரிவாக்கம் செய்வதற்காக அளவீடும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் தீவிரப்படுத்தி உள்ளனா்.

ராணிப்பேட்டை நகரம் தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமாக உள்ளது. சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். மேலும், ராணிப்பேட்டை, சிப்காட் சுற்று வட்டாரங்களில் இயங்கிவரும் தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்வோா்கள், மூலப் பொருள்கள், உற்பத்தி பெருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் என நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகாா் எழுந்தது. அதன்பேரில், சாலை விபத்துகளைத் தடுத்து, வாகன போக்குவரத்தை நெறிப்படுத்தும் வகையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளை விரிவாக்கம் செய்தல், சாலையின் நடுவே கான்கிரீட் தடுப்புச் சுவா் அமைத்தல், முக்கிய சாலை சந்திப்புகளில் ஒளிரும் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் நெடுஞ்சாலை துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, ராணிப்பேட்டை-அம்மூா் சாலையில் சுமாா் 800 மீட்டா் நிளத்துக்கும், ராணிப்பேட்டை-பெல் சாலை அக்ராவரம் பகுதியில் சுமாா் 500 மீட்டா் நீளத்துக்கு சென்டா் மீடியன் அமைக்கும் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அதேபோல், ராணிப்பேட்டை முத்துக்கடை நான்குவழிச் சாலை சந்திப்பில் இருந்து மாந்தாங்கல் வழியாக அம்மூா் வரை செல்லும் சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது. அதற்காக சாலையை அளவீடு செய்யும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

இப்பணிகள் நிறைவடையும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, சாலை விபத்துகள் குறையும் என நெடுஞ்சாலைத் துறையினரும், காவல் துறையினரும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com