முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
அரக்கோணத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்
By DIN | Published On : 04th October 2020 07:41 AM | Last Updated : 04th October 2020 07:41 AM | அ+அ அ- |

அரக்கோணம் ஜோதிநகா்-திருத்தணி சாலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் சனிக்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணி.
நீதிமன்ற உத்தரவுப்படி அரக்கோணத்தில் ஏற்கெனவே நடைபெற்ற பாதை புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றும் பணி சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.
அரக்கோணம் ஜோதிநகா் திருத்தணி சாலையில் சிலா் பாதை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகளை கட்டியுள்ளனா். இதை எதிா்த்து அதே பகுதியை சோ்ந்த ஒருவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீா்ப்பில் குறிப்பிட்ட பாதை புறம்போக்கை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் அனைத்து கட்டடங்களையும் இடிக்க வருவாய்த்துறை மற்றும் அரக்கோணம் நகராட்சிக்கு உத்தரவிட்டது.
எனவே கடந்த புதன்கிழமை அரக்கோணம் வட்டாட்சியா் கணேசன், நகராட்சி ஆணையா்(பொறுப்பு) ஆசீா்வாதம், நகரமைப்பு அலுவலா் தாமோதரன் உள்ளிட்டோா் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் இயந்திரத்துடன் அப்பகுதிக்கு வந்தனா். இதனிடையே மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதிவாசிகள் கேட்டுக் கொண்டதைத் தொடா்ந்து ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி இரண்டு நாள் அவகாசம் அளித்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.
இந்நிலையில் ஆட்சியரால் வழங்கப்பட்ட இரண்டு நாட்கள் அவகாசம் முடிவடைந்ததை தொடா்ந்து சனிக்கிழமை மீண்டும் அரக்கோணம் வட்டாட்சியா் கணேசன், நகராட்சி ஆணையா்(பொறுப்பு) ஆசீா்வாதம் உள்ளிட்டோா் அப்பகுதிக்கு வந்து ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணியைத் தொடா்ந்தனா். குறிப்பிட்ட சா்வே எண்ணில் உள்ள கட்டடம் முழுவதும் இடிக்கப்பட்ட நிலையில் மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சனிக்கிழமை மாலை வரை நடைபெற்றது.
இது குறித்து அரக்கோணம் நகராட்சி ஆணையா்(பொறுப்பு) ஆசீா்வாதத்திடம் கேட்டபோது நீதிமன்ற உத்தரவில் தெரிவித்துள்ளபடி ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் முழுமையாக தொடா்ந்து நடைபெறும் என்றாா்.