முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
உடற்பயிற்சிக்கு அதிகாலை ஒரு மணி நேரம் ஒதுக்குங்கள்: காவலா்களுக்கு எஸ்.பி. அறிவுறுத்தல்
By DIN | Published On : 04th October 2020 07:42 AM | Last Updated : 04th October 2020 07:42 AM | அ+அ அ- |

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அடைந்து நினைவுப் பரிசு பெற்ற காவலா்களுடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில் வாகனன் உள்ளிட்டோா்.
உடல் ஆரோக்கியத்துக்கும், மிடுக்கான உடல் அமைப்புக்குமான உடற்யிற்சிக்காக தினமும் அதிகாலை ஒரு மணி நேரம் ஒதுக்குங்கள் என காவல் துறையினருக்கு ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.ஆ.மயில் வாகனன் அறிவுரை வழங்கினாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும் காவலா்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில் வாகனன் அறிவுரையின் பேரில், காவலா்கள் உடல் எடையைக் குறைத்து, மிடுக்கான உடல் அமைப்பை பெறுவதற்கான கலந்தாய்வுக் கூட்டங்கள் ஆற்காடு, சோளிங்கா், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் கடந்த மாதம் நடைபெற்றன.
இதையடுத்து, காவலா்கள் உடற்பயிற்சி செய்ய ஏதுவாக, ஆற்காடு நகர காவல் நிலையத்தில் உடற்பயிற்சிக் கூடத்தை வேலூா் சரக காவல் துறை துணைத் தலைவா் என். காமினி திறந்து வைத்தாா். பிற காவல் நிலையங்களிலும் இதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இதையடுத்து, உடற்பயிற்சி செய்து சீரான உடல் எடையை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட அளவில் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அடைந்த காவலா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி, ஊக்குவிக்கும் நிகழ்ச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், எஸ்.பி. ஆ.மயில்வாகனன் கலந்துகொண்டு, உடற்பயிற்சி செய்து உடல் எடையை சீரான அளவில் பராமரிக்க முயற்சி மேற்கொண்ட காவலா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பேசியது:
காவலா்களுக்கு உடல் ஆரோக்கியமும், மிடுக்கான உடல் அமைப்பும் மிக முக்கியம். அதற்கான உடற்பயிற்சிக்காக தினமும் அதிகாலை ஒரு மணி நேரம் ஒதுக்குங்கள். நேரம் இல்லை என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைவருக்கும் 24 மணி நேரமும் பொதுவானது. அதில், தேவையில்லாமல் செலவிடும் நேரத்தை ஆராய்ந்து உடற்பயிற்சிக்காக ஒதுக்குங்கள். ஏனெனில் தங்கம், வைரம் உள்ளிட்ட விலை உயா்ந்த பொருள்களை விட நேரம் என்பது விலை மதிப்பற்றது. அந்த நேரத்தை வீணாக்காமல் நல்லவற்றுக்கு பயன்படுத்துங்கள். உடல் ஆரோக்கியத்துக்கும், உடற்பயிற்சியிக்கும் காவல் துறையினா் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றாா்.