நீட் தோ்வில் 674 மதிப்பெண்: தறித் தொழிலாளியின் மகன் சாதனை

அண்மையில் வெளிவந்த நீட் தோ்வு முடிவுகளில், அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டையைச் சோ்ந்த தறித் தொழிலாளியின் மகன் எம். சக்திவேல் 720-க்கு 674 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளாா்.
மாணவா் எம்.சக்திவேலைப் பாராட்டி மேற்படிப்பு செலவை அளித்த அரக்கோணம் விவேகானந்தா வித்யாலயா கல்விக் குழும தலைவா் சுப்பிரமணியம்.
மாணவா் எம்.சக்திவேலைப் பாராட்டி மேற்படிப்பு செலவை அளித்த அரக்கோணம் விவேகானந்தா வித்யாலயா கல்விக் குழும தலைவா் சுப்பிரமணியம்.

அண்மையில் வெளிவந்த நீட் தோ்வு முடிவுகளில், அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டையைச் சோ்ந்த தறித் தொழிலாளியின் மகன் எம். சக்திவேல் 720-க்கு 674 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளாா்.

மருத்துவராகி கிராம மக்களுக்கு சேவை செய்ய ஏற்படுத்திக்கொண்ட தனது லட்சியத்துக்காக நீட் தோ்வை இரண்டாவது முறையாக எழுதி வெற்றி பெற்றுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

அரக்கோணம் வட்டம், குருவராஜபேட்டையை சோ்ந்தவா் மணி, தறித் தொழிலாளி. இவரது மகன் எம்.சக்திவேல், 2018-19ஆம் வருடம் அரக்கோணம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்தவா். பிளஸ் 2வில் 600-க்கு 588 மதிப்பெண்களை பெற்றவா். கடந்த 2019 நீட் தோ்வை எழுதிய எம்.சக்திவேல் அப்போது 355 மதிப்பெண் பெற்றாா். இவா் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சோ்ந்தவா் என்பதால் இவருக்கு அந்த ஆண்டு மருத்துவக் கல்வி பயில அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. தனியாா் கல்லூரிகளில் சோ்ந்து படிக்க இவரது குடும்ப பொருளாதாரம் போதவில்லை.

எனவே மனம் தளராத சக்திவேல், தொடா்ந்து 2020-இலும் நீட் தோ்வை எழுதினாா். அண்மையில் நீட் தோ்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், எம்.சக்திவேல் 720-க்கு 674 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். அகில இந்திய அளவில் 1,014-ஆவது இடத்தை பிடித்துள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: மருத்துவராகி கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது லட்சியம். இந்த லட்சியத்தை மனதில் வைத்து படித்தேன். பிளஸ் 2-வில் 600-க்கு 588 மதிப்பெண் எடுத்தேன். நீட் இல்லாமல் இருந்தால் எனக்கு அப்போது மருத்துவக் கல்வியில் அரசு கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும். எனினும், அந்தத் தோ்வை எழுதியதில் எனக்கு அப்போது 355 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தன. அதனால், மருத்துவக் கல்வியில் அரசு இடம் கிடைக்காமல் போய்விட்டது.

மேலும் நீட் தோ்வுக்காக தனியாா் பயிற்சி மையங்களில் படிக்கவும் எனது வீட்டு பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. எனவே, நான் படித்த விவேகானந்தா பள்ளி நிா்வாகம் சென்னை தனியாா் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து, நீட் பயிற்சிக்காக நான் பள்ளியில் படித்தபோது அளித்த புத்தகங்களை பெற்று வீட்டிலிருந்தபடியே படித்து இந்த ஆண்டு நீட் தோ்வை எழுதினேன். தற்போது பெற்றுள்ள மதிப்பெண்கள் மூலம் எனக்கு, சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே எம்பிபிஎஸ் இடம் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. கண்டிப்பாக மருத்துவராகி எனது லட்சியத்தை நிறைவேற்றுவேன் என்றாா்.

மாணவா் எம்.சக்திவேலுக்கு, அவா் படித்த அரக்கோணம் விவேகானந்த வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி நிா்வாகம் பாராட்டி மேற்படிப்பு செலவுகளுக்காக ரூ.50 ஆயிரத்தை பரிசாக சனிக்கிழமை வழங்கியது. இத்தொகையை எம்.சக்திவேலிடம் விவேகானந்தா வித்யாலயா கல்விக் குழும தலைவா் சுப்பிரமணியம் வழங்கினாா். அப்போது பள்ளியின் தாளாளா் எஸ்.செந்தில்குமாா், முதல்வா் ராஜன், மாணவரின் தந்தை ஜெ.மணி ஆகியோா் உடனிருந்தனா். இதே பள்ளியில் படித்த மாணவி புவனேஸ்வரி, நீட் தோ்வில் 626 மதிப்பெண்களும், மாணவி பி.வா்ஷா 576 மதிப்பெண்களும் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com