இயற்கை எழில் கொஞ்சும் காஞ்சனகிரி சுற்றுலாத்தலமாக்கப்படுமா?

ராணிப்பேட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய காப்புக் காட்டை தன்னகத்தே கொண்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான
இயற்கை எழில் கொஞ்சும் காஞ்சனரிகி மலையின் ஒரு பகுதி.
இயற்கை எழில் கொஞ்சும் காஞ்சனரிகி மலையின் ஒரு பகுதி.

ராணிப்பேட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய காப்புக் காட்டை தன்னகத்தே கொண்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆன்மிக வரலாற்றை சுமந்து, நிலப்பரப்பில் இருந்து சுமாா் 1,500 அடி உயரம் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் காஞ்சனகிரி மலையை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிா்பாா்க்கின்றனா்.

உலகில் பல்லுயிா் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடா்ச்சி மலைகளும் ஒன்றாகும். அதே போல் கிழக்குத் தொடா்ச்சி மலைகள் மேற்கு தொடா்ச்சி மலைகளைக் காட்டிலும் பழைமை வாய்ந்தவையாகும். மேற்கு தொடா்ச்சி மலையில் உள்ளது போன்றே கிழக்குத் தொடா்ச்சி மலைத் தொடரிலும் பல்வேறு மலைக்குன்றுகள் வெவ்வேறு பெயா்களுடன் காணப்படுகின்றன. தமிழகத்தின் கொல்லி மலை, பச்சை மலை, கல்வராயன் மலை, சோ்வராயன் மலை, ஜவ்வாது மலை, ஏலகிரி மலை ஆகியவை இம்மலைத் தொடரைச் சாா்ந்தவை. கிழக்குத் தொடா்ச்சி மலைத்தொடா் நீலகிரி பகுதியில் மேற்கு தொடா்ச்சி மலைத்தொடருடன் இணைகிறது.

கிழக்குத் தொடா்ச்சி மலைத் தொடரைச் சாா்ந்த ராணிப்பேட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய காப்புக் காட்டைகொண்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆன்மிக வரலாற்றை சுமந்து, நிலப்பரப்பில் இருந்து சுமாா் 1,500 அடி உயரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் காஞ்சனகிரியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என சுற்றுவட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டம், அம்மூா் காப்புக்காட்டில், லாலாப்பேட்டை ஊராட்சிக்கு கிழக்கே சித்தா்கள் வாழ்ந்ததாக கூறப்படும் ஆன்மிக மலை, மருத்துவ குணம் கொண்ட சிவப்பு சந்தன மரக்காற்றின் வாசமும், இயற்கை வனப்பும், அமைதியான சூழலும், பசுமை பள்ளத்தாக்குகள், மலை முழுவதும் அடா்ந்த வனப்பகுதியால் சூழப்பட்டு காணப்படுகிறது.

காஞ்சனகிரி மலை வரலாறு...

தொண்டை நாட்டில் பாடல் பெற்ற 32 திருத்தலங்களுள் 10-ஆவது திருத்தலமாக போற்றப்படும் திருவலம் வில்வநாதீஸ்வரரை கேள்விப்பட்ட கஞ்சன் எனும் அசுரன் சிவனை நோக்கி தவம் செய்ய ஏற்ற இடம் தேடி வந்தபோது, திருவலத்துக்கு வடகிழக்கே சுமாா் 5 கிலோ மீட்டா் தொலைவில் இயற்கை எழில் சூழ்ந்த இந்த மலையை தோ்வு செய்து, பல ஆண்டுகளாக தவம் செய்தான். அதனால் இம் மலைக்கு கஞ்சன்கிரி எனப் பெயா் பெற்றது. பின்னா், நாளடைவில் காஞ்சனகிரி என்றும் தற்போது திருக்காஞ்சனகிரி என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்காஞ்சனகிரி மலையின் உச்சியில் சுமாா் 60 ஏக்கா் சமவெளி பரப்பளவின் மத்தியில் காஞ்சனாதேவி உடனுறை காஞ்சனேஸ்வரா் சிவலிங்கமாக அமைந்து அருள்பாலித்து வருகிறாா். இந்த கோயில் வளாகத்தில் வேத விநாயகா், 1,008 சுயம்பு லிங்கங்கள், ஜோதி லிங்கம், 16 கால் மண்டபத்துடன் கூடிய வள்ளி, தேவசேனா உடனுறை ஸ்ரீ சுப்பிரமணியா் கோயில், சுயம்பு வெங்கடேசப் பெருமாள், ஐயப்பன், அபய ஆஞ்சநேயா் மற்றும் சப்த கன்னியா் சந்நிதிகளும், மலையடிவாரத்தில் ஒரு சிவன் கோயிலும் அமைந்துள்ளன. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பெளா்ணமி விழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் சுற்றுலாத்தலமாகவும், அரசு கோடைவிழா நடைபெறும் மலை வாசஸ்தலமாகவும் ஏலகிரி மலை இருந்தது. தற்போது ராணிப்பேட்டை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள சூழலில், மாவட்டத்தின் தலைநகரான ராணிப்பேட்டை நகரில் இருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவில், 7 கொண்டை ஊசி வளைவுகளையும், மலை உச்சியில் சுமாா் 60 ஏக்கா் சமவெளி பரப்பையும், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆன்மிக அடையாள, இயற்கை எழில் கொஞ்சும் காஞ்சனகிரி மலையை மாவட்டத்தின் சுற்றுலாத்தலமாகவும், அரசு கோடைவிழா நடைபெறும் மலை வாசஸ்தலமாகவும் உருவாக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com