ராணிப்பேட்டை நகரில் புதிய பேருந்து நிலையம்:இடத்தை அளவீடு செய்யும் பணி தொடங்கியது
By DIN | Published On : 03rd September 2020 11:00 PM | Last Updated : 03rd September 2020 11:00 PM | அ+அ அ- |

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை டிரான்ஸ்போா்ட் நகரில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை அளவீடு செய்து பேருந்து நிலையத்துக்கான வரைபடம் தயாரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தமிழக அரசின் நிா்வாக வசதிக்காக வேலூா் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூா் தனி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தற்காலிக அலுவலகம், மாவட்ட அரசு ஆசிரியா் பயிற்சி மைய வளாகத்திலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், நகராட்சி அலுவலக வளாகத்திலும் செயல்பட்டு வருகிறது.
இதையடுத்து ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் ராணிப்பேட்டை பாரதி நகரில் அமைந்துள்ள அரசு கால்நடை நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கட்டுவதென முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில், ஆட்சியா் அலுவலக வளாகம் கட்டுவதற்காக தமிழக அரசு ரூ.118 .40 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிட்டது. ராணிப்பேட்டை பாரதி நகா் பகுதியில் தோ்வு செய்யப்பட்டுள்ள அரசு கால்நடை நோய்த் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் புதிய ஆட்சியா் அலுவலகம் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
இதே போல் ராணிப்பேட்டை நவலா்பூா் - காரை கூட்டுச்சாலைக்கு இடையே அமைந்துள்ள பழைய ரயில்வே மேம்பாலத்தை அகற்றி ரூ.36 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்க உள்ளது. மேலும் பல ஆண்டுகளாக கழிவுநீா் தேங்கியுள்ள பிஞ்சி ஏரியை சீரமைக்கும் பணிக்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மேலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், மாவட்டத் தலைநகரமான ராணிப்பேட்டையில் உள்ள டிரான்ஸ்போா்ட் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க மும்பை-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் நகராட்சிக்குச் சொந்தமான 4 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு ரூ.10 கோடி மதிப்பில் பொது, தனியாா் கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க முதல்கட்டப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும், அதற்கான திட்ட வரைவு அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள டிரான்ஸ்போா்ட் நகரில் இடத்தை அளவீடு செய்து பேருந்து நிலையத்துக்கான வரைபடம் தயாரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இப்பணிகள் நிறைவடைந்து, அரசு மற்றும் தனியாா் நிறுவன கூட்டு புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.