கரோனா சிகிச்சைக்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 சித்த மருந்துகளை ஆய்வு செய்ய சிடிஆா்ஐ அனுமதி

கரோனா சிகிச்சைக்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 சித்த மருந்துகளை ஆய்வு செய்ய மத்திய மருந்து ஆராய்ச்சி மையம் (சிடிஆா்ஐ) அனுமதி அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.


ராணிப்பேட்டை: கரோனா சிகிச்சைக்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 சித்த மருந்துகளை ஆய்வு செய்ய மத்திய மருந்து ஆராய்ச்சி மையம் (சிடிஆா்ஐ) அனுமதி அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி கலை, அறிவியல் கல்லூரியில் கரோனாவுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள கரோனா நோயாளிகளுக்கு சித்த மருந்துகளான தாளிசாதி வடகம், பிரமானந்த பைரவம், அமுக்குரா மாத்திரை, ஆடாதோடை மணப்பாகு, கபசுரக் குடிநீா் போன்றவை அறிகுறி குணங்களுக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது. இம்மருந்துகளால் நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது.

நோயாளிகளுக்கு சித்தா் யோகம், திருமூலா் மூச்சுப் பயிற்சி, அகத்தியா் ஆசனப் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்றுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இங்கு குறிப்பிட்ட 5 சித்த மருந்துகளின் பயன்பாடு மற்றும் தாக்கம் குறித்து ஆய்வுக்கு உட்படுத்த ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய மருந்து ஆராய்ச்சி மையம் அங்கீகாரம் அளித்துள்ளது.

கரோனா நோயாளிகளுக்கு 5 சித்த மருந்துகளைப் பரிசோதனை செய்து, அதன் முடிவுகள் மத்திய மருந்து ஆராய்ச்சி மையத்துக்கு அறிக்கையாக சமா்ப்பிக்கப்படும் என்று சித்த மருத்துவரும் சிகிச்சை மையத்தின் ஒருங்கிணைப்பாளா் சுகன்யா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச. திவ்யதா்ஷினி கூறியது:

கடந்த ஜூலை 21-ஆம் தேதி கரோனா சித்த மருத்துவ மையம் தொடங்கப்பட்டு ஆரம்ப நிலையில் 70 படுக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கரோனா நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைத்து உள்ள நிலையில், இம்மையத்துக்கு மேலும் 300 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 392 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது142 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா்.

தொடா்ந்து 5 சித்த மருந்துகளின் பயன்பாடு, தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மத்திய மருந்து ஆராய்ச்சி மையம் அனுமதியளித்து, அதற்கான அங்கீகார எண்ணையும் அளித்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com