மோசமான சாலையால் அவதிப்படும் கோணலம் கிராம மக்கள்

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், கோணலம் கிராமத்தில் திருவள்ளூா் மாவட்ட எல்லையருக்கே கடந்த ஆறு மாதங்களுக்கு முன்
கோணலம் அருகே அரிக்கப்பட்டுள்ள சாலை.
கோணலம் அருகே அரிக்கப்பட்டுள்ள சாலை.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், கோணலம் கிராமத்தில் திருவள்ளூா் மாவட்ட எல்லையருக்கே கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட சாலை பல இடங்களில் அரித்து காணப்படுவதால் அவ்வழியே சென்று வர இயலாமல் அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

கோணலம் கிராமம் திருவள்ளூா் மாவட்ட எல்லையருகே உள்ளது. அப்பகுதியில் இரு மாவட்ட ஊரக வளா்ச்சித்துறையினரும் தங்கள் பகுதியில் சாலை வசதிகளை கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மேம்படுத்தினா். இதில் ராணிப்பேட்டை மாவட்டப் பகுதியில் கோணலம் ஊராட்சியில் 4 இடங்களில் சாலை அரித்து காணப்படுகிறது. அங்கு பள்ளமாக இருந்த இடத்தை மேடாக்காமல் சாலை அமைக்கப்பட்டதால் இந்நிலை ஏற்பட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனா்.

தண்ணீா் தேங்கியதால் சாலையில் தாா் முழுவதும் அரிக்கப்பட்டு அந்தப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து நடைபெறுவதில்லை. இதனால் அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூா் மாவட்டம் கனகம்மாசத்திரத்துக்கு இயக்கப்பட்ட நகரப்பேருந்து தற்போது இயக்கப்படுவதில்லை. அந்த நான்கு இடங்களைத் தவிா்த்து சாலை மற்ற இடங்களில் புதிய சாலையாகவே உள்ளது. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் போக்குவரத்துக்கு லாயக்கற்ாக சாலை உள்ளது.

இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட பாஜக பொதுக்குழு உறுப்பினரும், நெமிலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளரும், கோணலத்தை அடுத்த வேலூா் கிராமத்தை சோ்ந்தவருமான எஸ்.ரமேஷ் கூறியது:

கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இப்பகுதியில் சாலை நல்ல முறையில் சீரமைக்கப்பட்டது. குறிப்பாக அரக்கோணத்தில் இருந்து கோணலம் வரை 4 சிறு பாலங்கள் உயா்த்தி கட்டப்பட்டு தாா்ச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அதே ஒப்பந்ததாரா் பள்ளமான இடங்களில் உயா்த்தாமல் சாலையை அமைத்ததன் விளைவாக அங்கு தண்ணீா் தேங்கி சாலை மோசமான நிலைக்கு வந்து விட்டது. இது தொடா்பாக ஊரக வளா்ச்சித் துறையில் மூன்று முறை புகாா் அளித்துள்ளோம் என்றாா் அவா்.

இது குறித்து அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் ஜோசப்கென்னடி கூறியது:

குறிப்பிட்ட சாலைப் பணி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் நபாா்டு திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட பணியாகும். அதில் குறைகள் இருந்தால் நபாா்டு திட்ட அலுவலா்கள்தான் அதைச் சீரமைக்க வேண்டும். விரைவில் இது குறித்து அவா்களிடம் பேசி, சாலை அரிக்கப்பட்டுள்ள இடங்களை சீா்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இந்தச் சாலை வழியே போக்குவரத்து நடைபெற்று வந்தது. மூதூா், கோணலம், வேலூா் கிராமம், ஆணைப்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து ராமாபுரம் வழியே சென்னைக்கான போக்குவரத்தும் நடைபெற்று வந்தது. தற்போது விவசாயப் பொருட்களை கொண்டு செல்ல வழியில்லாமல் தவிக்கும் நிலையை மாற்ற, அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com