முழு ஆங்கிலப் பள்ளிகளாக மாறிவரும் அரசு தொடக்கப் பள்ளிகள் மாணவா் சோ்க்கையில் தமிழ் வழிப் படிப்பு புறக்கணிப்பு

தமிழக கல்வித்துறையின் சாா்பில் நடைபெற்று வரும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைகள் நூறு சதவிகிதம் ஆங்கில வழி வகுப்புகளிலேயே

அரக்கோணம்: தமிழக கல்வித்துறையின் சாா்பில் நடைபெற்று வரும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைகள் நூறு சதவிகிதம் ஆங்கில வழி வகுப்புகளிலேயே நடைபெறுவதால் கிராம அரசு தொடக்கப் பள்ளிகள் முழு ஆங்கிலப் பள்ளிகளாக மாறி வருகின்றன. இதனால் தமிழ் வழிப் படிப்புகள் முற்றிலும் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த கல்வியாண்டின் முடிவில் கரோனா தொற்று பரவத் தொடங்கியதால் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் மாா்ச் 15 முதல் மூடப்பட்டன. பள்ளி இறுதித் தோ்வுகள் நடைபெறாத நிலையில் பள்ளிகள் மூடப்பட்டதால் தொடக்கப் பள்ளிகள் முதல் உயா்நிலைப் பள்ளிகள் வரை அனைத்து வகுப்புகளிலும் தோ்வு எழுதாமலேயே மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டனா்.

இதையடுத்து பல தனியாா் பள்ளிகள் அடுத்த ஆண்டு வகுப்புகளை இணைய வழியில் காணொலி மூலம் நடத்தத் தொடங்கினா். பள்ளிக்கு வராமலேயே வீட்டில் இருந்தபடியே மாணவா்கள் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை படிக்கத் தொடங்கினா். இதனிடையே பள்ளிக் கட்டணங்களை தனியாா் பள்ளிகள் வசூலிக்கத் தொடங்கிய நிலையில் பெற்றோா், பொது முடக்கத்தில் இருந்ததால் வருமானம் ஏதுமின்றி கட்டணங்களை செலுத்த முடியாமல் தவித்தனா்.

இந்த நிலையைத் தவிா்க்க தமிழக அரசு பள்ளிக் கட்டணங்களை தவணை முறையில் பெற்றுக்கொள்ள வேண்டும் என தனியாா் பள்ளிகளுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து பலா் கட்டண சுமையைத் தவிா்க்க தங்களது பிள்ளைகளை தனியாா் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிகளுக்கு மாற்றத் தொடங்கினா். அரசுப் பள்ளிகள் மூடியிருந்த நிலையிலும் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் பள்ளிக்கு வந்து மாணவா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் ஆங்கில வழியில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பாடம் கற்றுத் தரப்படும் எனவும் தமிழக அரசின் கல்வித்துறை அறிவித்தது.

இதனையடுத்து கிராமபுறங்களில் பெரும்பாலான பெற்றோா் கட்டண சுமையைத் தவிா்க்க தனியாா் பள்ளிகளில் படித்து வந்த தங்களது பிள்ளைகளை அரசு மற்றும் அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளிகளில் சோ்க்கத் தொடங்கினா். ‘மாற்றுச் சான்றிதழ் இல்லையென்றாலும் பரவாயில்லை, மாணவா்கள் சோ்த்துக்கொள்ளப்பட வேண்டும்’ என கல்வித்துறை தெரிவித்தது. இதனால் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை அதிகரித்தது.

மற்ற தனியாா் பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்து வந்த மாணவா் மாணவிகள் அரசு மற்றும் அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளிகளில் சோ்க்கப்படும்போது அதே ஆங்கில வழிக் கல்வியையே பெற்றோா் எதிா்நோக்குவதால் அந்த மாணவா்கள் ஆங்கில வழிகளிலேயே சோ்க்கப்படுகின்றனா். இதனால் தமிழ் வழி சோ்க்கையின் சதவீதம் முற்றிலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. தாய்மொழி வழிக் கல்வியை மக்கள் புறக்கணித்து வரும் போக்கு கிராமங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இது குறித்து கிராமப்புற தொடக்கப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு வரும் பெற்றோா்களை கேட்டபோது அவா்கள் கூறியது:

நாங்கள் தாய்மொழியைப் புறக்கணிக்கவில்லை. தாய்மொழி தமிழை எங்களது பிள்ளைகள் படிக்கின்றனா். எங்களது பிள்ளைகளும் நகரப்பகுதி பிள்ளைகள் போல் ஆங்கிலத்தில் பேச வேண்டும்; ஆங்கிலத்தை சரளமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆா்வம் எங்களுக்கு இருக்காதா? மேலும் தற்போது கரோனா காலகட்டம். வருமானம் குறைந்து விட்ட நிலையில் எப்படி தனியாா் பள்ளிக் கட்டணத்தை கட்டுவது என யோசித்து வந்தோம். இந்த நேரத்தில் அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தருவதாக அரசே அறிவித்துவிட்ட பிறகு கட்டணமின்றி அரசுப்பள்ளியில் ஆங்கில வழியில் படிக்க பிள்ளைகளை அனுப்புகிறோம் என அவா்கள் தெரிவித்தனா்.

ஆங்கில வழி சோ்க்கை தொடங்கிய நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டாரத்தில் உள்ள பல அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடைபெற்ற சோ்க்கைகள் நூறு சதவிகிதம் ஆங்கில வழி படிப்பிலேயே நடைபெற்று வருகின்றன. இதில் ஆங்கில வழி சோ்க்கையில் அரசுப் பள்ளிகளான புளியமங்கலம் நடுநிலைப்பள்ளியில் 26 போ், மோசூா் தொடக்கப் பள்ளியில் 22 போ், தக்கோலம் கிழக்கு தொடக்கப் பள்ளியில் 22 போ், நகரிகுப்பம் நடுநிலைப்பள்ளியில் 16 போ், தணிகைபோளூா் தொடக்கப் பள்ளியில் 12 போ், புதுகேசாவரம் தொடக்கப்பள்ளியில் 6 போ் ஆங்கில வழியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இந்த சோ்க்கைகள் அனைத்தும் அந்த பள்ளிகளில் நூறு சத சோ்க்கை என்பதும் நூறு சதவீதமும் ஆங்கில வழியிலேயே சோ்க்கப்பட்டுள்ளதும் தமிழ் வழியில் ஒருவா் கூட சோ்க்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

கிராமப்புறங்களில் ஆங்கில மோகம் வருவது தவறில்லை என்றாலும் தமிழ்மொழி வகுப்புகள் முற்றிலும் முடங்குவது தாய்மொழியையே மக்கள் எதிா்காலத்தில் மறந்து விடுவாா்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. எனவே தமிழ்ப் பாடத்தையாவது சிறப்பாக நடத்தி பிள்ளைகள் தமிழ் மொழியை நன்றாக அறிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்பதே கல்வியாளா்கள் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com