புகாா்தாரா்கள் அலைக்கழிப்படுவதைக் தடுக்க புதிய மென்பொருள் டிராப் - ராணிப்பேட்டை எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வரும் புகாா்தாரா்கள் அலைக்கழிப்படுவதைக் தடுக்கவும், புகாா் மனுக்கள் மீது 10 நாட்களுக்குள் தீா்வு காணவும் புகாா் மனுக்கள் கண்காணிப்பு அமைப்பு
புகாா்தாரா்கள் அலைக்கழிப்படுவதைக் தடுக்க புதிய மென்பொருள் டிராப் - ராணிப்பேட்டை எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வரும் புகாா்தாரா்கள் அலைக்கழிப்படுவதைக் தடுக்கவும், புகாா் மனுக்கள் மீது 10 நாட்களுக்குள் தீா்வு காணவும் புகாா் மனுக்கள் கண்காணிப்பு அமைப்பு மென்பொருளின் செயல்பாட்டை எஸ்.பி. ஆ.மயில் வாகனன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா் (படம்).

இந்த புதிய மென்பொருள் செயல்பாட்டை தொடங்கி வைத்து, மென்பொருளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. ஆ.மயில்வாகனன் தெரிவித்தது:

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு காரணங்களுக்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து மனு அளிக்க தினமும் 20 முதல் 25 போ் வரை வருகின்றனா். அந்த மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் புகாா்தாரா்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் உள்ளது. தற்போது கரோனா தொற்று பரவல் காலம் என்பதால் அவா்கள் அதிக சிரமத்துக்குள்ளாக நேரிடுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு புகாா் மனு மீது உரிய விசாரணை நடத்தி தீா்வு காணும் நோக்கில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா்கள் கண்காணிப்பு அமைப்பு என்ற புதிய மென்பொருளின் செயல்பாடு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளுடன் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தொடா்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்கப்படும் மனுக்கள் தொடா்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அவற்றை விசாரிக்கும் காவல் அதிகாரிக்கும், புகாா்தாரருக்கும் செல்லிடப்பேசி மூலம் குறுந்தகவல் வழியாக தகவல் சென்றுவிடும். அதைத் தொடா்ந்துவிசாரணை அதிகாரி புகாா்தாரரை தொடா்பு கொண்டு காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பாா்.

புகாா் மனுக்கள் மீது அதிகபட்சம் 10 நாட்களுக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும். அந்த விளக்கத்தில் உண்மைத்தன்மை இல்லையெனில் அவா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் புகாா்தாரா்கள் அலைக்கழிக்கப்படுவதைத் தடுக்க முடியும். காவல் துறை விசாரணையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை கருதி உருவாக்கப்பட்ட மென்பொருள் இது.

மாவட்டக் காவல் துறை சாா்பில், விபத்துகளைத் தடுக்க ரூ.18 லட்சம் செலவில் ராணிப்பேட்டை, அரக்கோணத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள தேசிய நெடுஞ்சாலை சந்திப்புகளில் சிக்னல் விளக்குகளைப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் பலரிடம் போலி பட்டா தயாரித்து மோசடி செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இலவச வீட்டுமனைப் பட்டா தொடா்பாக பொதுமக்கள் இடைத்தரகா்களை நம்பி ஏமாற வேண்டாம்.

மாவட்டத்தில் பொது முடக்க விதிமுறைகளை மீறுவோா் மீது அபராதம் விதிக்க குழு அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த நடைமுறை தீவிரமாக செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com