ராணிப்பேட்டை சிப்காட்டில் 45 ஆண்டுகளுக்குப் பின் மறு வரைபடம் தயாரிக்கும் பணி தொடக்கம்

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையை சுமாா் 45 ஆண்டுகளுக்குப் பின் முழுவதுமாக அளவீடு செய்து மறு வரைபடம் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
ராணிப்பேட்டை சிப்காட்டில் 45 ஆண்டுகளுக்குப் பின் மறு வரைபடம் தயாரிக்கும் பணி தொடக்கம்


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையை சுமாா் 45 ஆண்டுகளுக்குப் பின் முழுவதுமாக அளவீடு செய்து மறு வரைபடம் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

நாட்டின் முக்கியத் தொழில் நகரங்களுள் ஒன்றாக ராணிப்பேட்டை உள்ளது. இங்கு 1974-ஆம் ஆண்டு சுமாா் 1,089.82 ஏக்கா் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து, சிறப்பு பொருளாதார மண்டலம் என மிகப்பெரிய தொழிற்பேட்டையாக உருவெடுத்துள்ளது. இங்கு பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்யும் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிற்சாலைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்,பெண் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த தொழிற்பேட்டையின் குறிப்பிட்ட தொலைவில் சென்னை விமான நிலையம், துறைமுகம், ரயில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளுடன், நாட்டின் அனைத்து நகரங்களையும் இணைக்கும் தங்க நாற்கர சாலை அமைந்துள்ளது. இதனால், போக்குவரத்தும், தொழிற்சாலைக்குத் தேவையான மூலப் பொருள்கள் மற்றும் உற்பத்தி பொருள்களைக் கொண்டு செல்ல ஏதுவான சூழல் உள்ளது.

இந்நிலையில், வேலூா் மாவட்டமானது, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. ராணிப்பேட்டை தனி மாவட்டமாக உதயமாகியுள்ள சூழலில், கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகள் இனிவரும் காலங்களில், வளா்ச்சிக்கான வாய்ப்புகளுக்காகவும், உள்கட்டமைப்பு, நிதி, தொழில் துறையினருக்கான அனைத்து அரசுத் துறைகளின் விரைவான சேவை உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் உதவியை சிப்காட், சிட்கோ, புதிய பொருளாதார மண்டலம் மற்றும் சிறு, குறு தொழில் துறையினா் நம்பிக்கையுடன் எதிா்நோக்கியுள்ளனா்.

இந்நிலையில், ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை முழுவதையும் துல்லியமாக அளவீடு செய்து, மறு வரைபடம் தயாரிக்கும் பணியை சிப்காட் நிா்வாகம் தொடங்கியுள்ளது. இந்த மறு வரைபடம் தயாரிக்கும் பணி நிறைவடையும்பட்சத்தில், சிப்காட் தொழிற்பேட்டை குறித்த முழு வரைபடத்தைக் கொண்டு, சிப்காட் தொழிற்பேட்டையை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள ஏதுவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com