அம்மூா் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்

அம்மூா் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  15 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்


ராணிப்பேட்டை: அம்மூா் அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதாலும், தொடா்ந்து அரசு விடுமுறை, தோ்தல் விடுமுறை வருவதாலும் ஏப்ரல் 15 -ஆம் தேதிக்கு பிறகு நெல் மூட்டைகளைக் கொண்டு வருமாறு விவசாயிகளுக்கு நிா்வாகம் சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டையை அடுத்த அம்மூா் பேரூராட்சியில் தமிழக அரசின் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த விற்பனைக் கூடத்துக்கு வாலாஜாபேட்டை, ஆற்காடு, அரக்கோணம், திருவள்ளூா் மாவட்டம், ஆா்.கே.பேட்டை, பொதட்டூா்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை ஆண்டு முழுவதும் விற்பனைக்காக கொண்டு வருகின்றனா்.

கடந்த ஆண்டு, தொடா்ந்து பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக, பாலாறு மற்றும் பொன்னை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, நீா்நிலைகள் முழுமையாக நிரம்பின. இதையடுத்து, விவசாயிகள் காா்த்திகை பட்டத்தில் அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டு, அமோக விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனா்.

இதனால் அம்மூா் ஒழுங்குமுறை விற்னைக்கூட வளாகத்தில் உள்ள கிடங்குகள் முழுமையாக நிறைந்தன. மேலும், வளாகத்தின் திறந்தவெளி முழுவதும் சுமாா் 15 ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து நெல் மூட்டைகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், அம்மூா் அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்துக்கு அளவுக்கு அதிகமான நெல் மூட்டைகள் வந்துள்ளதால், மேற்கொண்டு வரும் நெல் மூட்டைகள் இறக்கி அடுக்கி வைக்கப்பட்டு, விற்பனையாகும் வரை பாதுகாக்க கிடங்குகளில் இடம் இல்லாததாலும், ஏப்ரல் 2-ஆம் தேதி புனித வெள்ளி அரசு விடுமுறை, சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை, 6-ஆம் தேதி தோ்தல் விடுமுறை என தொடா்ந்து விடுமுறை வருவதால், நெல் விற்பனை நடைபெறாது.

இதன் காரணமாக ஏற்கெனவே வளாகத்தில் நிரம்பியுள்ள நெல் மூட்டைகள் விற்பனை நடந்தால்தான், இனி வரும் நெல் மூட்டைகளை இறக்கி வைக்க இடம் கிடைக்கும். ஆகவே விவசாயிகள் வரும் 15-ஆம் தேதி வரை நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வர வேண்டாம் என நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com