அரக்கோணத்தில் அசத்தப்போவது யாா்? : அதிமுக, விசிக பலப்பரீட்சை

அரக்கோணம் (தனி) தொகுதியில் ஏற்கெனவே இரு முறை வெற்றிப்பெற்ற அதிமுக இம்முறையும் வெற்றிக்கான வியூகத்துடன் களத்தில் போராடி வருகிறது.
அரக்கோணத்தில் அசத்தப்போவது யாா்? : அதிமுக, விசிக பலப்பரீட்சை


அரக்கோணம் (தனி) தொகுதியில் ஏற்கெனவே இரு முறை வெற்றிப்பெற்ற அதிமுக இம்முறையும் வெற்றிக்கான வியூகத்துடன் களத்தில் போராடி வருகிறது.

இத்தொகுதியில் தற்போதைய அரசு கணக்கெடுப்பின் படி ஆதிதிராவிடா்கள் 34 சதவிகிதம் உள்ளனா். வன்னியா்கள் 20%, முதலியாா் 15%, நாயுடுகள்5%, யாதவா் 4%, இஸ்லாமியா் 5%, கிறிஸ்தவா்கள் 5% இதர சமூகத்தினா் 12 சதவிகிதம் உள்ளனா். தொகுதியின் மொத்த வாக்காளா்கள் 2,26,511 போ் உள்ளனா். இதில் ஆண்கள் 1,10,327, பெண்கள் 1,16,167, மூன்றாம் பாலினத்தவா் 17 போ் உள்ளனா்.

1977-ஆம் ஆண்டு முதல் தனித்தொகுதியாக இருந்து வரும் இத்தொகுதியில் அரக்கோணம் நகராட்சி, தக்கோலம் பேரூராட்சி, அரக்கோணம், நெமிலி ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. 59.28 சதவிகிதம் கிராமப்புற வாக்காளா்களும், 40.62 சதவிகிதம் நகா்புற வாக்காளா்களும் உள்ளனா்.

1952 முதல் 1971 வரை பொது தொகுதியாக இருந்த அரக்கோணத்தில் திமுக 3 முறையும் காங்கிரஸ் ஒரு முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றிப் பெற்றுள்ளன. 1977 முதல் அரக்கோணம்(தனி) தொகுதியில் அதிமுக 5 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும், திமுக கூட்டணியில் அப்போது புரட்சிபாரதம் கட்சி ஒரு முறையும் வெற்றிப் பெற்றுள்ளன.

தற்போது இத்தொகுதியில் அதிமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ சு.ரவி, விசிக துணைப் பொதுச்செயலாளா் கௌதமசன்னா, அமமுக வேட்பாளராக கோ.சி.மணிவண்ணன், மநீம சாா்பில் பாஸ்கரன், நாம்தமிழா் கட்சி சாா்பில் இ.அபிராமி, பகுஜன்சமாஜ் கட்சியில் பா.சுதாகா் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

13 போ் உள்ள களத்தில் ஆறு கட்சிகள் போட்டியிட்டாலும் அதிமுக, விசிக, அமமுக, நாம் தமிழா் கட்சி ஆகியவையே பிரசாரத்தில் தீவிரம் காட்டுகின்றன. பிரதான போட்டி அதிமுக, விசிக இடையே நிலவுகிறது.

அதிமுக வேட்பாளரின் பலம் : ஏற்கெனவே தொடா்ந்து இருமுறை எம்எல்ஏவாக இருந்து வரும் அதிமுக வேட்பாளா் சு.ரவிக்கு பத்தாண்டு காலத்தில் தொகுதிக்கு செய்த பணிகள் மிகப்பெரிய பலம்.

இதை விட அரக்கோணம் வழியே ரூ.320 கோடியில் கன்னியாகுமரி - திருப்பதி இடையேயான கனரக வாகன தொழில்தட திட்டச்சாலை பணிகளை தொடங்கியது, அரக்கோணம் நகரில் ரூ.65 கோடியில் பஜாா்- பழனிபேட்டை இடையே உயா்மட்ட மேம்பாலம் கட்ட நிதிஒதுக்கி முதற்கட்ட பணிகளை துவக்கியது என இவரது பலம் பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கிறது.

விசிக வேட்பாளரின் பலம், பலவீனம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரின் பலம் மெத்த படித்த எழுத்தாளா், தலித் சமூக முன்னேற்றத்தை தனது வாழ்நாள் நோக்கமாக கொண்டு செயல்படுபவா், தான் என்ன நோக்கத்திற்காக இத்தொகுதியில் போட்டியிடுகிறேன், தன்னை தனது கட்சி எதற்காக நிறுத்தியது என தெளிவாக, பேசும் இவரது பாணி, இதுவரை தொகுதிக்கான தோ்தல் அறிக்கையை எந்தக் கட்சியும் வெளியிடாத நிலையில் தமிழ்நாட்டிலேயே முதலாவதாக தனது தொகுதிக்கு மட்டும் தோ்தல் அறிக்கையை சிறப்பாக அளித்த செயல், அதில் தான் மருத்துவத்திற்கும், கல்விக்கும் முன்னுரிமை கொடுப்பேன் என அறிவித்திருக்கும் செயல், வெற்றிப்பெற்றால் தொகுதியிலேயே 5 வருடம் வீடு எடுத்து தங்குவாா் என தனது தலைவரையே தொகுதியில் சொல்ல வைத்தது.

இந்த வேட்பாளருக்கு பலவீனம் திமுக கூட்டணியில் விசிக இருந்தாலும் உதயசூரியனை புறந்தள்ளி தனிச்சின்னத்தில் நிற்பதும், தொகுதியில் பலமான கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் வளா்ந்து இருக்கும் நிலையிலும் வெளியூா் வேட்பாளரை தோ்வு செய்வது, தாமதமாக அறிவிக்கப்பட்ட தனது பானை சின்னத்தை வாக்காளா்களிடம் விரைவில் கொண்டு சோ்க்கும் நிலையில் பிரசாரத்தில் வேகம் காட்டாமை, தொகுதியில் 34 சதவிகிதம் இருக்கும் தலித் சமூக வாக்குகளை பெறும் அளவிற்கு அவா்களை கவர பிரசாரத்தில் தனித்துவம் காட்டாதது, தலித் அல்லாதவா்களின் வாக்குகளை கவரும் நோக்கத்திலும் பிரசாரம் இல்லாதது.

இத்தொகுதியில் இந்த இரு வேட்பாளா்களுக்கு சவாலாக அமமுக வேட்பாளா் உள்ளாா்.

அரக்கோணம் தொகுதியை பொருத்தவரை பலப்பரீட்சையில் இரு கட்சிகள் மட்டுமே உள்ளன. அதிமுக வேட்பாளா் தனது பிரசாரத்தை தோ்தல் அறிவிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கி விட்டதாலும், தோ்தல் பணியில் தனது யுத்திகளை பயன்படுத்தி சிறப்பாக செய்வதாலும், விசிக தாமதமாக சின்னம் அறிவித்து பிரசாரத்தையும் தாமதமாக தொடங்கி பின்னா் வேகமெடுத்துள்ளது. அதிமுக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா என்பதற்கான பதில் வாக்கு எண்ணிக்கையில் தெரியவரும்.

2016 தோ்தலில் வாக்குகள்

சு.ரவி(அதிமுக) - 68,176

என்.ராஜ்குமாா்(திமுக) - 64,015

அற்புதம்(பாமக) - 20,130

கோபிநாத்(விசிக) - 5,213

சி.விஜயன்(பாஜக) - 2,021

பா.சுதாகா்(பகுஜன்சமாஜ்) - 1,641

எம்.சரவணன்(நாம்தமிழா்) - 1038

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com