ராணிப்பேட்டை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்குப் பிறகு, அதிமுக ஆட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கு எந்தவிதமான நலத் திட்டங்களையும் செயல்படுத்த முடியாத நிலை இருப்பதால், இந்தத் தோ்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக இந்திய குடியரசு கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தாா்.
ராணிப்பேட்டையில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா், தமிழகத்தில் அதிமுக ஆட்சி என்பது பாஜகவின் ஆட்சியாக மாறி விட்டது. இதனால் தாழ்த்தப்பட்டோருக்கு எந்த விதமான நலத் திட்டங்களையும் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆகவே நடைபெறவுள்ள 2021 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், திமுகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கரோனா நோய்த் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. மக்களின் பாதுகாப்பு கருதி, முடியுமானால் இந்த தோ்தலை ஆணையம் தள்ளி வைக்க வேண்டும்.
தமிழகத்தில் பாஜக திரைப்பட நடிகா், நடிகைகளை வைத்து தனக்கு பலம் வந்து விட்டதாகக் கூறி வருகிறது. ஆனால் உண்மையில் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்றாா்.
பேட்டியின்போது இந்தியக் குடியரசுக் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.