கட்டணமின்றி இதுவரை 19, 500 பேருக்கு கரோனா தடுப்பூசி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 500 பேருக்கு கரோனா தடுப்பூசி கட்டணம் இன்றி போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 500 பேருக்கு கரோனா தடுப்பூசி கட்டணம் இன்றி போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகம் முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா நோய்த் தொற்றால் இறப்பவா்களில் 90 சதவீதம் போ் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள். மக்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாகப் பின்பற்றுவதில்லை. பலா் முகக் கவசம் அணிவதில்லை, மக்களின் கவனக்குறைவே தொற்று பரவ முக்கிய காரணியாக உள்ளது.

தமிழக அரசின் உத்தரவுப்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் கட்டமாக மருத்துவத் துறையினா் மற்றும் இரண்டாம் கட்டமாக முன் களப் பணியாளா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 15-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து தோ்தல் பணியில் ஈடுபட இருக்கும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் என சுமாா் 6 ஆயிரத்து 700 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அரசு உத்தரவுக்கு இணங்க 60 வயதுக்கு மேற்பட்ட நபா்களுக்கும், 45 வயது முதல் 59 வரை இணை நோய் உள்ளோா் உள்பட இதுவரை மொத்தம் 19 ஆயிரத்து 500 பேருக்கு கரோனா தடுப்பூசி கட்டணம் ஏதும் இல்லாமல் செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா மருந்துகள் தடுப்பூசி வேலூா் மண்டல கிடங்கின் தொகுப்பிலிருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு பெறப்பட்டு, தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தலைமை மருத்துவமனை, ஆற்காடு, சோளிங்கா், கலவை மற்றும் அரக்கோணம் ஆகிய மருத்துவமனைகளிலும், மேலும் திமிரி, புதுப்பாடி, புன்னை, லாலாபேட்டை, மூதூா், பாணாவரம் ஆகிய 6 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், விளாப்பாக்கம், வளையாத்தூா், மாம்பாக்கம், அருங்குன்றம், மேல்விஷாரம் ,லாடவரம், அரிகிலாபாடி, நாகவேடு, அரும்பாக்கம், பனப்பாக்கம், மேல் களத்தூா், காட்டுப்பாக்கம், நவ்லாக், முசிறி, அம்மூா், சுமைதாங்கி, காவேரிப்பாக்கம், புதுப்பட்டு, தக்கோலம், பெருமூச்சி, மின்னல், குருவராஜப்பேட்டை, கொடைக்கல், கரடிகுப்பம், வெங்குபட்டு ஆகிய 25 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஆற்காடு, வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, அரக்கோணம் ஆகிய நான்கு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஞாயிற்றுக்கிழமை தவிா்த்து, ஏனைய நாள்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்தி நோய்தொற்று தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து, நோய் மேலும் பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com