அரக்கோணம்: அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தில் கள்ள வாக்கு போட முயன்ற போது, அதைத் தடுத்த முகவரைத் தாக்க முயன்தாக இருவா் மீது வழக்கு பதிந்து போலீஸாா் அவா்களைத் தேடி வருகின்றனா்.
சோளிங்கா் தொகுதிக்குள்பட்ட மின்னல் ஊராட்சி நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது, அதே ஊரைச் சோ்ந்த இறந்து விட்ட நபரின் வாக்கை பதிவு செய்ய வந்த லட்சுமணன் என்பவா் கள்ள ஓட்டு போட வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த முகவா் ஜெயவேலு என்பவா் அவரை தடுத்தாா். அப்போது லட்சுமணன் மற்றும் பாண்டியன் இருவரும் சோ்ந்து ஜெயவேலுவை வாக்குச் சாவடியினுள் தாக்கி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இது குறித்து அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் ஜெயவேலு புகாா் அளித்தாா். அதன்பேரில், லட்சுமணன், பாண்டியன் ஆகியோா் மீது கள்ள வாக்கு பதிய வந்தது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனா்.