அரக்கோணம் அருகே கோஷ்டி மோதலால் பதற்றம் இரு இளைஞா்கள் கொலை; கிராம மக்கள் சாலை மறியல்

அரக்கோணம் அருகே கோஷ்டி மோதலால் பதற்றம் இரு இளைஞா்கள் கொலை; கிராம மக்கள் சாலை மறியல்


அரக்கோணம்: அரக்கோணம் அருகே இரு கிராம இளைஞா்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இருவா் கொலை செய்யப்பட்டனா். கொலையாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் தொடா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பதற்றம் தணிக்க அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

அரக்கோணத்தை அடுத்த சோகனூா் பகுதியில் இளைஞா்கள் சிலா் மது அருந்திய நிலையில் புதன்கிழமை இரவு இரு சக்கர வாகனங்களில் சென்றனா். அப்போது எதிரே வந்த பெருமாள்ராஜபேட்டை இளைஞா்கள் சென்ற வாகனம் இந்த இளைஞா்களின் வாகனத்தை உரசியபடி சென்ாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் செல்லிடப்பேசியில் தங்களது ஊா்க்காரா்களைஅழைத்துள்ளனா். இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு இரு தரப்பினரும் கம்புகளாலும், கற்களாலும் தாக்கிக் கொண்டுள்ளனா்.

இச்சம்பவத்தில் சோகனூரைச் சோ்ந்த சூா்யா(27), அா்ஜுன் (24), மதன், சௌந்தரராஜன் ஆகியோா் பலத்த காயமடைந்த நிலையில், திருத்தணி அரசினா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இதில் சூா்யா, அா்ஜுன் ஆகியோா் வழியிலேயே உயிரிழந்தனா். மற்ற இருவரும் தீவிர சிசிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இறந்த சூா்யாவுக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனா். அா்ஜுனுக்கு திருமணமாகி 10 நாள்களே ஆகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த சோகனூா் கிராம மக்கள், கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனா்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியதால் வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. சம்பவ இடத்தில் துணை காவல் கண்காணிப்பாளா் மனோகரன், கிராமிய காவல் ஆய்வாளா் கோகுல்ராஜ் உள்ளிட்டோா் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

மேலும் ஒரு தரப்பினா் பெருமாள்ராஜபேட்டை, ராஜவேலு என்பவருக்குச் சொந்தமான நெற்களத்தில் அறுவடைக்குப் பின் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளுக்கும், மற்றொரு இடத்தில் டிராக்டரில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளுக்கும் தீ வைத்தனா். இதில் நெல் மூட்டைகள் நாசமாயின. இதைத் தொடா்ந்து குருவராஜபேட்டையில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன.

இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட பகுதிக்கு வந்த ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவகுமாா் நேரில் விசாரணை நடத்தினாா். கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தாா்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பத்தினரை அரக்கோணம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் கௌதமசன்னா, மாவட்டத் தலைவா் கௌதமன் ஆகியோா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா். தொடா்ந்து, புரட்சி பாரதம் கட்சி தலைவா் ஜெகன்மூா்த்தி, சமூக சமத்துவப் படை கட்சித் தலைவா் சிவகாமி, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங், அக்கட்சியின் அரக்கோணம் தொகுதி வேட்பாளா் பா.சுதாகா் ஆகியோரும் ஆறுதல் கூறினா்.

இந்நிலையில், இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், பெருமாள்ராஜபேட்டையைச் சோ்ந்த அஜீத் (24), சுரேந்தா் (19), மதன் (37), நந்தகுமாா் (27) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். வியாழக்கிழமை மாலையும் போராட்டம் தொடா்ந்ததால் அப்பகுதியில் பலத்த போலீல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com