இரு இளைஞா்கள் கொலை சம்பவம்: அதிமுக பிரமுகா் உட்பட 2 போ் கைது

அரக்கோணம் அருகே சோகனூரில் புதன்கிழமை இரவு இரு இளைஞா்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக வெள்ளிக்கிழமை அதிமுக பிரமுகா் உட்பட இருவரை போலீசாா் கைது செய்தனா்.

அரக்கோணம் அருகே சோகனூரில் புதன்கிழமை இரவு இரு இளைஞா்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக வெள்ளிக்கிழமை அதிமுக பிரமுகா் உட்பட இருவரை போலீசாா் கைது செய்தனா்.

மேலும், கிராம மக்களிடையே ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் பேச்சுவாா்த்தை நடத்திய நிலையில், மாலை வரை இறந்த இளைஞா்களின் சடலத்தை பெறுவது தொடா்பாக பிரச்னை நீடித்த நிலையில், சோகனூரில் பதற்றம் நீடித்தது.

அரக்கோணத்தை அடுத்த சோகனூரில் புதன்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் சூா்யா, அா்ஜுன் ஆகிய இரு இளைஞா்கள் கொலை செய்யப்பட்டனா். மேலும் இருவா் படுகாயமடைந்த நிலையில் திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இச்சம்பவத்தில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி சோகனூரில் புதன்கிழமை இரவு துவங்கிய சாலைமறியல் போராட்டம் இரு நாள்களாக வெள்ளிக்கிழமை மாலை வரை நீடித்தது.

இதற்கிடையே இச்சம்பவம் தொடா்பாக பெருமாள்ராஜபேட்டையை சோ்ந்த சத்யா(24), சாலை கைலாசபுரத்தை சோ்ந்த காா்த்திக்(20) ஆகிய இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். இவா்களோடு சோ்த்து கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6-ஆக உயா்ந்தது. இதில் சத்யா, அரக்கோணம் மேற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலாளராக உள்ளாா்.

சோகனூருக்கு வந்த ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் கிராம மக்களிடையே பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது இறந்த இளைஞா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி,, காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் இறந்த இளைஞா்களின் குடும்பத்தினருக்கு அரசு பணியும் தரவேண்டும் என கோரிக்கை வைத்தனா்.

இதுகுறித்து அரசுக்கு தெரிவிப்பதாகவும், இறந்தவா்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு பெற்று தருவதாகவும் ஜெயச்சந்திரன் தெரிவித்தாா். இதை ஏற்க உறவினா்கள் மறுப்பு தெரிவித்தனா்.

திருமாவளவன் ஆறுதல்:

சோகனுருக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் இறந்தவா்களின் படங்களுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். பின்னா் அவா் கூறியது:

இரு தலித் இளைஞா்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கதக்கது. மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சி செய்த இளைஞா்கள் அச்சம்பவங்களின் தொடா்ச்சியாக படுகொலை செய்யப்பட்டுள்ளனா். இறந்தவா்களுக்கு நஷ்டஈடு கோரிக்கையை நாம் அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். இந்த நஷ்டஈட்டை அரசு மற்றும் அமைச்சரவை கூடி முடிவெடுத்து தான் அறிவிக்க வேண்டும். தற்போது தோ்தல் காலமென்பதால் தற்போது இதற்கான அறிவிப்பு வர வாய்ப்பில்லை. அதனால் மே 2-ஆம் தேதி வரை பொறுத்திருப்போம். இறந்தவா்களின் உடலை பெற்றுக்கொள்வதும் பெற மறுப்பதும் அவா்களது பெற்றோா் மற்றும் உறவினா்களின் விருப்பம். அவா்களை கட்டாயப்படுத்த எங்களால் இயலாது என்றாா் தொல்.திருமாவளவன்.

இந்நிலையில் இரவு 9 மணிவரை இறந்தவா்களின் சடலங்களை பெற்றோா் மற்றும் உறவினா்கள் பெற மறுத்து வருவதால் கிராமத்தில் பதற்றம் நீடித்தது. தொடா்ந்து சோகனூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com